Home / செய்திகள் / முக்கிய செய்திகள் /

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை: முதல்வர் உறுதி!

Posted On : March 4, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட ஆவன செய்யுமாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கிராமப் பிரதிநிதிகள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்காது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சி.வேலு தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை புதன்கிழமை சந்தித்தது. இந்தச் சந்திப்பு தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: நெடுவாசல் கிராமத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. காவிரி கடைமடைப் பகுதியில் உள்ள இந்தக் கிராமத்தில் போதிய நீர் ஆதாரமின்றி நிலத்தடி நீர் மூலமே விவசாயம் தற்போது நடைபெறுவதால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அனுமதி கிடையாது:
நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளின் கோரிக்கையை கவனமாகக் கேட்ட முதல்வர், இந்தப் பிரச்னை குறித்து பிரதமரை நேரில் சந்தித்தபோது எடுத்துரைத்ததாகவும், அதை அப்போதே ஊடகம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என நெடுவாசல் விவசாயப் பிரதிநிதிகளிடம் முதல்வர் உறுதி அளித்தார்.
அச்சம் வேண்டாம்: மேலும், நெடுவாசல் கிராமத்தில் வணிகரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலிய சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இந்தத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது. எனவே, நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வர் உறுதி அளித்தார்.
போராட்டத்தைக் கைவிடுங்கள்:
தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக்கூடிய எந்தத் திட்டமானாலும், அதனை தமிழக அரசு செயல்படுத்தாது என தமிழக அரசு உறுதி அளிக்கிறது என முதல்வர் தெரிவித்தார். இந்த உறுதியை ஏற்று நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்று நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், புவியியல் -சுரங்கத் துறை ஆணையாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
கிராம மக்களின் கருத்தறிந்து முடிவு: நெடுவாசல் பிரதிநிதிகள் தகவல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நீட்டிப்பதா அல்லது விலக்கிக் கொள்வதா என்பது குறித்து கிராம மக்களின் கருத்தறிந்து முடிவு எடுக்கப்படும் என நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த பிறகு, 11 பேர் கொண்ட நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சி.வேலு கூறியதாவது:
ஆய்வு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியையும், வணிகரீதியிலான அனுமதியையும் தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் உறுதிபடத் தெரிவித்தார். முதல்வர் அளித்த உறுதிமொழியையும், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கத்தையும் முழுமையாக வரவேற்கிறோம்.
நல்ல செய்தியை அறிவிக்க: நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தற்போது போராட்டக்களத்தில் உள்ளனர். நாங்கள் சென்று அவர்களிடம் அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவோம். நல்ல செய்தியை விரைவாக அறிவிக்க முயற்சிப்போம் என்றார் வேலு. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி: மத்திய அரசின் சார்பில் ஆய்வுப் பணிகளை நிறுத்த உத்தரவாதம் தரப்பட்டதா?
பதில்: அங்கு இன்னும் துரப்பணப் பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான அனுமதிகள் எதுவும் தமிழக அரசிடம் இருந்து தரப்படவில்லை. எனவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என நம்புகிறோம்.
கேள்வி: நீங்கள் அங்கு போய் என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில்: போராட்டக்களத்தில் உள்ள மக்களைச் சந்தித்து, இந்தத் திட்டம் தொடர்பாக அரசுத் தரப்பில் இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டுள்ளது; அதனைப் பரீசிலிக்க வேண்டும். மேலும் போராட்டத்தைத் தொடர்வதா, கைவிடுவதா என முடிவு எடுக்க வேண்டும் என்று எடுத்துக் கூற இருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும் அது அங்கிருந்துதான் வர வேண்டும்.
கேள்வி: போராட்டத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துவீர்களா?
பதில்: தமிழக அரசின் உறுதிமொழிகள், அரசு அறிக்கையின் சாராம்சங்கள் எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. இதனை போராட்டக்காரர்களிடம் எடுத்துச் சொல்வோம். அதேசமயம், அவர்கள் எங்களின் கருத்துகளுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
கேள்வி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா?
பதில்: இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு ஆலோசனை, விளக்க, கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தவே இல்லை. ஏழை விவசாயிகள், விவசாயம் செய்து கொண்டிருக்கக் கூடிய பகுதிகளை, இடங்களை குத்தகைக்கு எழுதி வாங்கியுள்ளனர். பல பேர் குத்தகைக்கு கொடுத்துள்ளனர். 4 ஏக்கர் வரையிலான நிலங்களை விவசாயிகள் ஏமாந்து அளித்துள்ளனர் என்றார் வேலு.

Comments

தொடர்புடைய செய்திகள்