Home / உலகம் /

தைவானுக்கு சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனா திட்டவட்டம்

Posted On : March 6, 2017

சீனாவின் இறையாண்மையைக் காப்போம், தைவானுக்கு சுதந்திரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சீன பிரதமர் லீ கெகியாங் திட்டவட்டமாகக் கூறினார். பெய்ஜிங்கில் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக, முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 2,900 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழுவின் கூட்டத்தில் வரும் ஆண்டுக்கான பொருளாதார திட்டங்கள், ஒதுக்கீடுகள் குறித்து அறிக்கை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் அரசின் சில முக்கியக் கொள்கை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதும் வழக்கமாக உள்ளது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனத் தலைமையின் இரண்டாவது முக்கிய நபரான பிரதமர் லீ கெகியாங் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:
சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்குமான வளர்ச்சி, ஸ்திரத்தன்மையே நமது கொள்கை. சீனா ஒரே நாடு என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். சீனாவின் இறையாண்மையையும் எல்லைகளையும் பொருத்தவரையில், எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நமது தாய்நாட்டிலிருந்து தைவான் பகுதியைப் பிரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எந்தப் பெயரில் நடந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதைப் பொருத்துக் கொள்ள மாட்டோம். தைவானுக்கு சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டார்.

பொருளாதாரம் குறித்துப் பேசும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருந்தது. வேகமான வளர்ச்சியைவிட சீரான வளர்ச்சியே நன்மை அளிக்கும். அதே சமயத்தில் அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வின்றித் தொடரும். வரும் நிதி ஆண்டில் நகர்ப்புறங்களில் 1.1 கோடி பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கடந்த ஆண்டைவிட இது 10 லட்சம் கூடுதலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% என்பது சீனாவைப் பொருத்தவரையில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பொருளதாரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவைக் கண்டு வருகிறது என்பதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது. தனது உரையில் பாதுகாப்புத் துறை பட்ஜெட் எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீடு சுமார் 14,370 கோடி டாலர் (சுமார் ரூ.9.35 லட்சம் கோடி).

பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டை விட இப்போது 7 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று மூத்த அதிகாரியொருவர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் உரையில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் அது தொடர்பான முழு விவரங்கள் அளிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இருபத்து மூன்று லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படையைக் கொண்டிருக்கிறது சீனா. ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு எவ்வளவு என்று அறிய அனைவரும் ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம்.

தைவான் பிரச்னை பின்னணி

1949-ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரையடுத்து, தைவான் தீவில் சுயாட்சி நிலவி வருகிறது. இருந்தபோதிலும், சீனாவிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக தைவான் அறிவித்துக் கொள்ளவில்லை. இரு பகுதி தலைமைக்கும் சிக்கலான உறவு நிலவுகிறது. தைவானை தங்களது நாட்டின் பகுதியாகவே சீனா இன்னும் கருதி வருகிறது. இரு பகுதிகளும் அரசியல் ரீதியாக ஒரு நாள் மீண்டும் இணையும் என்று காத்திருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த குவோமின்டாங் கட்சி சீனாவுடன் மிக நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியது. அக்கட்சியின் நிலைப்பாடு பெரும்பான்மையான தைவான் மக்களிடையே எடுபடவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. தைவானில் நடைபெறும் தேர்தல்களை சீனா அங்கீகரிப்பதில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்