Home / உலகம் /

நாட்டு மக்கள் அனைவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்குள் மின்சார வசதி

Posted On : March 6, 2017

இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்குள் மின்சார வசதியை செய்து கொடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எரிசக்தி தொடர்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 85 சதவீத உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை (ரூ.500, ரூ.1,000) வாபஸ் பெறுவது தொடர்பான முடிவை எங்களது அரசு எடுத்தது. அதன்பிறகும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கிறது.

நிகழாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை விஞ்சிவிடும். அடுத்த ஆண்டில் (2018-ஆம் ஆண்டு) இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியடையும். எரிசக்தி துறையில் இந்தியாவில் புதிய சாதனையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைவருக்கும் எரிசக்தியை வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உலகம் வெப்பமயமாகி வருகிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இன்னமும் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மின்சார வசதியை 2018-ஆம் ஆண்டுக்குள் செய்து கொடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

மின்சாரத்துக்கு நிலக்கரியையே இந்தியா தற்போதும் சார்ந்துள்ளது. அதாவது, 60 சதவீத மின்சாரம், நிலக்கரியில் இருந்துதான் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இருந்து எரிவாயு மற்றும் புதிய வழிகளில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் முறைக்கு இந்தியா விரைவில் மாறும். பருவநிலை நீதியில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. தனது பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலுக்கு இந்தியா எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார் பிரதான்.

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதான், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலுள்ள கென்னடி அரசு நிர்வாகவியல் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். அமெரிக்க அரசு மூத்த அதிகாரிகள், அமெரிக்க எரிசக்தி துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட எரிசக்தி துறை நிபுணர்களையும் சந்தித்துப் பேசினார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழக மாணவர்களுடனும் கலந்துரையாடினார். அதையடுத்து ஹுஸ்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்