Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

நீர்மின் உற்பத்தி சரிவு எதிரொலி: கர்நாடகம் முழுவதும் மின்வெட்டு அமல்?

Posted On : March 6, 2017

அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததைத் தொடர்ந்து நீர்மின் உற்பத்தி சரிந்துள்ளதால் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் மின்வெட்டை அமல்படுத்த மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லை. இதனால், அணைகளில் நீர்மின் உற்பத்தி சரிந்துள்ளது. இதன் காரணமாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டை அமல்படுத்த மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இரண்டாமாண்டு பியூசி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற இருப்பதால் மின்வெட்டை அமல்படுத்தாமல் இருக்கும் கர்நாடக அரசு, அடுத்த சில வாரங்களில் மின்வெட்டை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மின் துறை அதிகாரி ஒருவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், நீர்மின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு தினமும் 103 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், தினமும் 70 மெகாவாட் மின்சாரம் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் தற்போது 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும் விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தொடர்ந்து மின்சாரத்தை விநியோகித்து வருகிறோம். தற்போதைய நிலையில் கர்நாடகம் முழுவதும் தினமும் 221.27 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்குப் போதுமான மின்சாரம் கையிருப்பில் இல்லை. மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் நிலை உருவாகும்.

அப்போது மின்வெட்டு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பெங்களூருவில் தினமும் காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை, முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 3 மணிவரை மின் தடை செய்ய அரசு யோசித்து வருகிறது. அதேபோல, தொழில்பேட்டைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தவும் பரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என்றார் அவர்.

Comments

தொடர்புடைய செய்திகள்