மல்யுத்த வீராங்கனை சாக்ஷியின் குற்றச்சாட்டிற்கு அரியானா அரசு மறுப்பு
அரியானா அரசு தனக்கு வழங்குவதாகக் கூறிய பரிசுத் தொகையினை இன்னும் வழங்கவில்லை என்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-இன் குற்றச்சாட்டை அரியானா அரசு மறுத்துள்ளது.
சாக்ஷி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தினத்தன்றே அவருக்கு ரூ.2½ கோடிக்குரிய காசோலை வழங்கப்பட்டு விட்டது என மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ரோடாக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் பணி வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அவர் இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயக்குனராக நியமிக்கப்படுவார். அதற்குரிய கடிதம் இன்னும் 3-4 தினங்களில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாக்ஷி மாலிக் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்ஷிக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்திருந்தது.
ஆனால் அண்மையில் இது தொடர்பில் தெரிவித்த சாக்ஷி, அரியானா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு வெறும் ஊடகங்களுக்கானது மாத்திரமா எனக் கேள்வியெழுப்பி தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.