Home / விளையாட்டு /

மெக்ஸிகோ ஓபன்: சாம் கியூரி சாம்பியன்

Posted On : March 6, 2017

மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் சாம் கியூரி சாம்பியன் பட்டம் வென்றார். மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சாம் கியூரி 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின்
ரஃபேல் நடாலைத் தோற்கடித்தார்.

சர்வதேச தரவரிசையில் 40-ஆவது இடத்தில் இருக்கும் சாம் கியூரி நடாலுக்கு எதிராக 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். இதுவரை நடாலுடன் 5 முறை மோதியுள்ள கியூரி, முதல்முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். மெக்ஸிகோ ஓபனில் 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், முதல்முறையாக இங்கு தோற்றுள்ளார். முன்னதாக 14 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றிருந்தார்.

சாம் கியூரிக்கு இது 9-ஆவது ஏடிபி பட்டமாகும். இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், நிக் கிர்ஜியோஸ், நடால் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சாம் கியூரி.

Comments

தொடர்புடைய செய்திகள்