Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Posted On : March 6, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடலில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஆர்.கே.நகர் சென்ற அவர், ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிவாரண நிதி வழங்கும் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய திட்டங்கள் குறித்து பேசினார்.

அப்போது,  மீனவர் நலன் காப்பதில், எம்.ஜி.ஆர் எப்படி கண்ணும் கருத்துமாக செயல்பட்டாரோ அதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் மீனவர் சமுதாயத்திற்காக ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்தார் என பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் குறுகிய காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்படும்.

ஜெயலலிதா ஆட்சியில்தான் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை ரூ.5 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தியது. 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மீனவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்று கூறினார். மேலும், மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் அரசு கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா 115 கடிதங்களை எழுதியதாகவும் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகை மத்திய அரசிடமிம் கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்குவதன் அடையாளமாக 10 பேருக்கு இந்த நிவாரண நிதியை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அண்மையில் வீசிய வர்தா புயலின்போது பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மீனவர்களின் 18 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான தனது சுற்றுப் பயணத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கவுள்ளார். மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்