Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

உ.பி.க்கு இளைஞர்களின் அரசே தேவை

Posted On : March 7, 2017

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இளைஞர்களின் அரசே தேவை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வயதாகி விட்டதாகவும் அவர் விமர்சித்தார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வயதாகி விட்டது. ஆதலால் நிச்சயம் அவர் சோர்வாக உணர்வார். எனவே உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜவாதி கூட்டணி இளைஞர்களின் அரசை அமைக்கும்.

இந்த அரசு, உத்தரப் பிரதேசத்தை உலகத்தின் தொழிற்சாலையாக மாற்றும். உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட பொருள் என்பதை குறிக்கும் அடையாளத்துடன் கூடிய பொருள்களை உலகெங்கிலும் கிடைக்கச் செய்யும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி அமெரிக்காவுக்கு செல்லும்போது, அங்கு விற்பனை செய்யப்படும் செல்லிடப்பேசிகளில் உத்தரப் பிரதேச தயாரிப்பு குறியீடுகள் இடம்பெற்றிருக்கும். அமெரிக்கா முழுவதும் உள்ள கடைகளில் உத்தரப் பிரதேச தயாரிப்பு பொருள்கள் இருக்கும். இதைக் கண்டு விவசாயி ஆச்சரியப்படுவார்.

ஒபாமாவின் மனைவி மிச்செல் சமையல் செய்யும்போது, அங்கிருக்கும் பொருள்களில் ஜான்பூரில் தயாரிக்கப்பட்டது என்ற குறியீடுகள் இருப்பதை பார்த்து கண்டு மகிழ்ச்சியடைவார். பிரதமர் மோடிக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம் தெரிவித்தேன். மோடிக்கு ஓய்வு தேவைப்படுவதாக கூறினேன். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நீங்கள் பதவியேற்றால், அவருக்கு ஓய்வு கிடைக்கும் என்றேன். வாராணசியில் பிரதமர் மோடி நடிக்கும் படத்துக்கு திரும்பத் திரும்ப காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன (பிரதமர் மோடியின் பிரசாரத்தை விமர்சித்தார்).

4 நாள்களில் 4 முறை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் நினைத்ததுதான் நடக்கவில்லை. உண்மையில் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். ஆதலால்தான் வாராணசியில் 3 நாள்களாக முகாமிட்டு பேரணி நடத்தி வருகிறார். கங்கை மாதா தனது மகன் என்ற முறையில் தம்மை அழைத்திருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். அவரிடம் ஒன்று கேட்கிறேன். கங்கை மாதாவுக்கு இந்தியாவில் ஒரேயொரு மகன்தான் இருக்கிறாரா? பாஜக மூத்த தலைவர் அத்வானியை ஓய்வெடுக்க வைத்து விட்டார் மோடி.

மத்திய அரசு பணிகள் அனைத்துக்கும் மோடி சொந்தம் கொண்டாடுகிறார். இஸ்ரோ அமைப்பு ராக்கெட் செலுத்தினால், அதற்கும் சொந்தம் கொண்டாடுகிறார். அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் அப்போதைய அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்தபோது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாட்டிலேயே இருக்குமாறு கூறி விட்டார் என்றார் ராகுல் காந்தி.

Comments

தொடர்புடைய செய்திகள்