Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை: சிகிச்சை ஆதாரங்கள் வெளியீடு

Posted On : March 7, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆதாரங்களை தில்லி செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை (மார்ச் 6) விளக்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள், வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு 5 முறை தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தில்லியில் தமிழக அரசிடம் சமர்ப்பித்து, இணையதளத்திலும் வெளியிட்டது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) சீனிவாஸ் அறிக்கையை வெளியிட அதை தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை (மார்ச் 6) பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் ஜி.சி.கில்னானியும் உடனிருந்தார்.

தொடர்ந்து சென்னையில் வெளியீடு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் உயிரிழந்தது வரையிலான சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் விரிவான அறிக்கை, அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை ஆகியவை தமிழக அரசின் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் அவரின் மறைவு குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து அரசின் பதிவுகளோடு கூடுதலாக, அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை அறிக்கை மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையும் கேட்டுப் பெறப்பட்டது. மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விவரங்கள், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையோடு ஒத்திருந்தது.

ஆபத்தான நிலையில் இல்லை: செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், அரசியல் தலைவர்கள் கூறுவது போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இல்லை.

5 அரசு மருத்துவர்கள் குழு: அப்பல்லோ மருத்துவக் குழுவினர், லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீல், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த இயன்முறை நிபுணர்கள் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், மருத்துவர்களை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசின் 5 மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோ மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டனர்.

தவறான மருந்துகள் அளிக்கப்படவில்லை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் சில காலங்களுக்கு அவருக்குத் தவறான மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே, அவரின் உடல பாதிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், தோலில் அவருக்கு ஏற்பட்டிருந்த பிரச்னைகளுக்கான ஸ்டீராய்டு மருந்தைத் தவிர, சர்க்கரை நோய்க்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளுக்குமான மாத்திரைகளையே அவர் உட்கொண்டு வந்தார் என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமான சிகிச்சை: ஜெயலலிதாவுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தைச் சிலர் எழுப்பியுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில், மருத்துவக் குழுவினரால் மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அப்பல்லோவில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகளுக்குப் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவருக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது தெளிவாகிறது.

மருத்துவ நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது: பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் நெறிமுறைகளின்படியும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை வெளியிடக் கூடாது. எனினும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவரது மறைவு குறித்தும் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவுவதால், அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையையும், எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையையும் வெளியிட தமிழக அரசு தீர்மானித்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிர்பாராத வகையில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது அறையிலேயே இருந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் அவரது சுவாசத்தை மீட்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, இருதய செயல்பாட்டுக்கான (’எக்மோ’) கருவியும் பொருத்தப்பட்டது. மாரடைப்பிலிருந்து அவரை மீட்டெடுப்பதற்காக மருத்துவ நெறிமுறைகளின்படி அவருக்கு அளிக்க வேண்டிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அந்தச் சிகிச்சைகளை அப்பல்லோ மருத்துவ நிபுணர்களும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களும் கண்காணித்தனர். எக்மோ கருவி பொருத்தப்பட்ட பின்பும் அவருடைய இருதயம் செயல்படவில்லை என்றும் நரம்பியல் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல்: மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உயிர் காக்கும் சிகிச்சைகள் குறித்தும் அதன் பின்பும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது குறித்தும் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கும், சசிகலா, தலைமைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு, மருத்துவ நெறிமுறைகளின்படி செயல்படும்படி மருத்துவக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்