Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஜெயலலிதா மரணம் பற்றி ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? மு.க. ஸ்டாலின்

Posted On : March 7, 2017

ஜெயலலிதா மரணம் பற்றி முறையான நீதி விசாரணை நடத்தினால்தான் ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? என்பது வெளிப்படையாக தெரியவரும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகரில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மதுரைசாமி மடம் அருகில் உள்ள சென்னை உருது பள்ளி, கே.சி.கார்டன் பகுதியில் உள்ள சென்னை நடு நிலைப்பள்ளி, ஜி.கே.எம். காலனியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

அதேபோல, கபிலர் தெருவில் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும், வார்டு எண் 69 ல் மறைந்த கழக தொண்டர் ஏசுதாஸின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்றைக்கு கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். அதேபோல சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிட்டேன். குறிப்பாக வார்டு 66 க்கு உட்பட்ட குமரன் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டேன்.

வார்டு 66 ல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய 4 பள்ளிகளை பார்வையிட்ட போது, அந்த பள்ளிகளுக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி எடுத்துச் சொல்லி இருக்கின்றேன். தேவையெனில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற பல பணிகள் நிறைவேற வேண்டி இருப்பது குறித்தும், தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்தும் துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியிருக்கின்றேன். அதேபோல, அண்மையில் மறைந்த கழக தோழர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கின்றது.

கேள்வி: தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தெரிவித்தீர்கள். இந்த நிலையில் இன்று ஒரு மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறாரே?

பதில்: திமுக சார்பில் தொடர்ந்து நாங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை என்னவெனில், வெறும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, முதல்வர் மத்தியில் இருக்கக்கூடிய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடத்திலோ, வேண்டுமெனில் பிரதமரிடமும் இதுகுறித்து விளக்கமாக பேசி, அதற்குரிய பரிகாரத்தை காண வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை செய்வது எனில் முதலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டும், என்று தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றியும், அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்மங்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் அதே உணர்வோடுதான் இருக்கிறார்கள் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இந்த நிலையில் நேற்று அரசின் சார்பில் திடீரென ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இருக்கக்கூடிய வாசகங்களை படித்துப்பார்த்தோம் என்றால், அவை வேதனையாக மட்டுமல்ல, வேடிக்கையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல், அதேபோல நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது. இரண்டொரு நாளில் அது முழுமையாக சரி செய்யப்பட்டு அவர் இல்லம் திரும்புவார், என்றுதான் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், போயஸ் தோட்டத்திலிருந்து முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகிற நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். செயற்கை சுவாசத்தின் மூலமாகத்தான் அவருக்கு மூச்சு விடக்கூடிய சூழ்நிலை இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, டிசம்பர் 4 ஆம் தேதி இதயத்துடிப்பு நின்றது குறித்து வந்த அறிக்கைக்கும், தற்போது வெளிவந்து இருக்கக்கூடிய அறிக்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள், நிறைய குளறுபடிகள் இருக்கிறது.

நீங்கள் இங்கே கேட்டது போல, வருகிற 8 ஆம் தேதி, அதாவது நாளைய தினம், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எதற்காக என்று கேட்டால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, நீதி விசாரணை நடத்திட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்து அவர் உண்ணாவிரதம் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஓ.பி.எஸ் தான் முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஓ.பி.எஸ். என்ன சொல்கிறார் என்றால், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கரிடம்தான் முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்று சொல்கிறார். ஆகவே, இப்படி இரண்டு பேரும் மாறி மாறி சொல்வதைப் பார்க்கின்றபோது, ‘அப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையில்தான் இந்த செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.

ஆகவே, ஜெயலலிதா முதல்வராக இருந்து மறைந்திருக்கிறார். அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில், தனிப்பட்ட முறையில், அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்திருந்தால், அதில் எந்தவித பிரச்னைக்குள்ளும் நாங்கள் செல்ல விரும்பவில்லை, தயாராகவும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கக்கூடியவர் மரணம் அடைந்திருக்கும் போது, அந்த மரணத்திலே மர்மம் இருக்கிறது என்று பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, எனவே, அதைத்தான் நாங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுகின்றோம்.

எனவே, முறையான நீதி விசாரணை நடத்தினால்தான் ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? அப்பல்லோ மருத்துவமனை சொல்வது உண்மையா? அல்லது நேற்றைய தினம் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கை உண்மையா? வெளியில் பரவிக் கொண்டிருக்கும் அந்த செய்திகள் உண்மையா? என்பது நாட்டுக்கு நன்றாக, வெளிப்படையாக தெரியவரும். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், உடனடியாக முறையான ஒரு நீதி விசாரணையை நடத்தி மக்களுக்கு தெளிவுப்படத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: இலங்கை அரசை கண்டித்து திமுக சார்பில் எதுவும் போராட்டம் நடக்குமா?

பதில்: ஏற்கனவே, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்க்காகவும் நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் நிச்சயமாக நடத்துவோம்.

கேள்வி: ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறீர்கள், திமுக எம்.எல்.ஏ-க்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னும் பொருட்கள் இல்லை என்பதுதான் நிலவரமாக இருக்கிறது. ஏற்கனவே, ஆர்ப்பாட்டம் என்று கூறியிருந்தீர்கள். அது தொடருமா?

பதில்: ஒரு வார காலத்திற்குள் சரி செய்யவில்லை என்றால், ரேஷன் கடைகளுக்கு முன்னால் பொதுமக்களை ஒன்று திரட்டி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நிச்சயம் நடத்துவோம். விரைவில் அதற்கான தேதியை அறிவிப்போம்.

கேள்வி: மீனவர்களுடைய படகு ஏற்கனவே பிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தவிருந்தனர். ஆனால், இப்போது இந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய நிவாரணம் வழங்க வலியுறுத்துவீர்களா?

பதில்: நேற்றைக்கு கூட மீன்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் இதுவரையில் மீனவர்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்பட்டதில்லை, சாவு ஏற்பட்டதில்லை என்று பேசியிருக்கிறார். ஆனால், நேற்றைக்கு இரவு கூட அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உடனடியாக மாநில அரசு சார்பில் நேரடியாக சென்று, ஒரு அழுத்தத்தை தந்து, உடனடியாக இதை நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

Comments

தொடர்புடைய செய்திகள்