Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

தமிழக பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்: முதல்வர் பழனிசாமி

Posted On : March 7, 2017

தமிழக மீனவர்கள் விவகாரம், சேலம் உருக்காலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  நேற்றைய தினம் தங்கச்சி மடம் மீனவர் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு ஒருவர் மரணம் அடைந்தார். ஒருவர் காயமடைந்து மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணம் அடைந்ததற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்திலும், பிரதமரிடமும் குரல் எழுப்புவோம் என்று கூறினார். சேலம் இரும்பாலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  சேலம் இரும்பாலை தொடர்ந்து பொது நிறுவனமாக இருப்பதற்கு தமிழக அரசு சார்பில் முயற்சி செய்வோம். விரைவில் நாடாளுமன்றம் கூட உள்ளது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் இதனை வலியுறுத்துவார்கள் என்றார்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாவது குறித்து கேட்ட கேள்விக்கு, ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் பழனிசாமி.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வெகு நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்றார். மேலும், மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான முழு திட்ட அறிக்கை, ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து விரைவில் தூர்வாரும் பணி தொடரும் என்றார் முதல்வர்.

Comments

தொடர்புடைய செய்திகள்