Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

நெடுவாசல் போராட்டத்தில் 50 கிராமத்தினர் பங்கேற்பு

Posted On : March 7, 2017

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, 19-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, பெண்கள், இளைஞர்கள் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல், திரைத்துறையினர் ஆதரவளித்து பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை அறவழியில் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். நெடுவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், அப்பகுதியினரோடு சுற்றுப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில், பெண்கள் கும்மியடித்தும், நாட்டுப்புற பாடல்கள் பாடியும், ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டக் களத்தில் உணவு: நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் வெளியூரில் இருந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் போராட்டக் களத்திலேயே உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. கீரமங்கலத்தில் போராட்டம் தடுத்து நிறுத்தம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல், வடகாட்டில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை காலை பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த கீரமங்கலம் போலீஸார் போராட்டத்தை தடுத்து, அங்கிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால், அவர்கள் போலீஸாரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

வடகாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்றுப் பேசியது: மக்கள் விரும்பாத திட்டங்களை பாஜக செயல்படுத்தாது என கூறும் தமிழக பாஜக தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும், கடந்த 19 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரானது என்பது இன்னும் தெரியவில்லையா? பல்வேறு பிரச்னைகளை கடந்து சாகுபடி செய்து 30 ஆண்டு கால உழைப்பில் மரங்களை வளர்த்து இந்தப் பகுதியை பசுமையாக வைத்துள்ளனர் விவசாயிகள். அப்படிப்பட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்