Home / விளையாட்டு /

பொய் வாக்குமூலம் அளித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் அனுராக் தாக்குர்

Posted On : March 7, 2017

பிரமாணப் பத்திரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர்.

பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். மேலும், பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை) பிரதிநிதியை நியமிப்பது, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை அதன் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு ஐசிசியிடம் அனுராக் தாக்குர் கோரிக்கை விடுத்ததாக லோதா குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், அதுபோன்ற கடிதம் எதையும் கேட்கவில்லை என தெரிவித்தார். ஆனால் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனுராக் தாக்குர் ஐசிசியிடம் கடிதம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், அனுராக் தாக்குர், பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பதவி நீக்கம் செய்தது. மேலும் பிரமாணப் பத்திரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அனுராக் தாக்குர், நான் வேண்டுமென்றே பொய் வாக்குமூலம் அளிக்கவில்லை என தெரிவித்ததோடு, எந்த மாதிரியான சூழலில் தவறு நடந்தது என்பது குறித்தும் விளக்கமளித்தார். இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது அனுராக் தாக்குர் ஆஜராகத் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்