Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மீனவர்களைப் பாதுகாக்க விழிப்புடன் செயல்படுவோம்: முதல்வர் பழனிசாமி உறுதி

Posted On : March 7, 2017

சென்னை ஆர்.கே.நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கச்சா எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மீனவர்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு எப்போதும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட மூன்று மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்வு, ஆர்.கே.நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகைகளை வழங்கி முதல்வர் பேசியது: பாக். வளைகுடாப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதிலும் திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுப்பதிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்.

இப்போதுள்ள அரசும் அதே உறுதியுடன் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், கடந்த 27-ஆம் தேதி புதுதில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து மீண்டும் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல் நிகழ்வுகள், துன்புறுத்தல்கள், சிறைபிடித்தல் ஆகிய சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் இதுவரை முதல்வர் ஜெயலலிதாவின் அரசால் 115 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 2011-ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட 2,541 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 357 மீன்பிடி படகுகள் விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போது இலங்கைச் சிறைகளில் உள்ள 85 மீனவர்களை 128 படகுகளுடன் விரைவில் மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்குத் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எண்ணெய்க் கசிவால் பாதிப்பு: எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே இரண்டு தனியார் கப்பல்கள் எதிர்பாராத விதிமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதில், கப்பலிலிருந்து கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடலில் பரவியது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எண்ணெய்க் கசிவால் மூன்று மாவட்டங்களிலும் 104 கிலோமீட்டருக்கு மேலாக பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் மீனவர்களும், மீன்பிடிப்பு சார்ந்த தொழில் புரிவோரும் பாதிப்படைந்தனர்.

தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு: மாசுபடுத்தியவரே மாசு நிவர்த்திக்கான செலவினத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் பாதிக்கப்படட மீனவர்களின் வாழ்வாதார இழப்பீடாக மாநில அரசால் மதிப்பீடு செய்யப்பட்ட ரூ.135.35 கோடியை உரிய காப்பீட்டு நிறுவனத்திடம் பெறும் வகையில் அதற்கான கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் துயரை விரைந்து நீக்கும் வகையில் இடைக்கால நிவாரணமாக ரூ.75 கோடி வழங்கக் கேட்டு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் துயர்களைக் களையும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.15 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது. அதனைச் செயல்படுத்தும் வகையில் நேரில் வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு இயற்கை இடர்ப்பாடுகளால், துயரம் ஏற்படும் போதெல்லாம் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி அரவணைத்து வந்திருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நல்ல அரசும், சிறந்த அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து எங்களுக்குப் பயிற்சி அளித்த வண்ணம் இந்த அரசு இப்போது மக்களின் எண்ணமறிந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

மறைந்த ஜெயலலிதாவின் எண்ணப்படி, மீனவர்களைப் பாதுகாப்பதில் இந்த அரசு எப்போதும் விழிப்புடனும், விவேகத்துடனும் செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு மீன்வளம், நிதித் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் தலைமை வகித்தார். மீóன்வளத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி வரவேற்றார். ஆணையாளர் பீலா ராஜேஷ் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றறனர்.

’மீன் சாப்பிடுங்கள்: நோய்கள் அண்டாது’ : மீன் சாப்பிட்டால், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற எந்த நோய்களும் அண்டாது என்று மீன்வளம், நிதித் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியது: எண்ணெய்க் கசிவு காரணமாக மீன் சாப்பிடக்கூடாது என்ற வதந்தியால், மீன் விற்பனை நடைபெறாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வதந்தி காரணமாக 15 நாள்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்கு ஆளாகினர். மீன் பிடித்தொழில் என்பது ஆழ்கடலில் மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் நிபுணர்களை கொண்டு 75 கிலோ மீட்டர் வரை ஆய்வு நடத்தினோம்.

அந்த ஆய்வில் மீன்களில் எண்ணெய்க் கசிவு பாதிப்பு கிடையாது என்று தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மீன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்ற விழிப்புணர்வு முகாம்களை 5 இடங்களில் நடத்தினோம். மீன் உணவில் கரோட்டின் உள்பட பல சத்துகள் உள்ளன. மீன் சாப்பிட்டால் கண்ணாடி போடத் தேவையில்லை. நானே 55 வயதுக்குப் பின்னர்தான் கண்ணாடி போட்டேன். மீன் உணவில் நல்ல கொழுப்பு அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பை விலக்குகிறது. இதனால், மாரடைப்பு வராது. மீன் சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பும் குறைவு.

Comments

தொடர்புடைய செய்திகள்