Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ரூ. 4,500 கோடி செலவில் 50 விமான நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On : March 7, 2017

நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகளை புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பயன்பாட்டில் இல்லாத சுமார் 50 விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2017-18-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, விமான நிலையங்களைப் புதுப்பிக்க ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பாட்டில் இல்லாத மற்றும் குறைந்த அளவே பயன்பாடுளைக் கொண்ட 50 விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக, 2018-19-ஆம் நிதியாண்டில் 15 விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளும், 2019-20-ஆம் நிதியாண்டில் மேலும் 20 விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளும் புதுப்பிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் மாநகரங்கள் விமானம் மூலம் இணைக்கப்படும். இதனால் அந்த நகரங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் பெறப்பட்ட மற்ற திட்டங்கள்: இதுதவிர, சர்வதேச சரக்குப் போக்குவரத்துக்கான சுங்க வரி அமைப்பில் இந்தியா இணைவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைப்பில் இந்தியா இணையும்பட்சத்தில், மற்ற நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்கள் தங்குதடையின்றி விரைவாகச் சென்றடையும். இதேபோல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பாக போர்ச்சுகலுடன் இந்தியா செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், மின்சார சேமிப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்