Home / விளையாட்டு /

ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது இந்தியா: 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Posted On : March 8, 2017

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியிடம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதற்கு பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி. முன்னதாக, பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 9 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் அடித்திருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மட் ரென்ஷா 60, ஷான் மார்ஷ் 66 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்தியா, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 79, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது நாள் ஆட்டத்தில் ரஹானே அரைசதம் கடந்து 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கருண் நாயர் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த விருத்திமான் சாஹா சற்று நிலைக்க, மறுமுனையில் 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்திருந்த புஜாரா ஹேஸில்வுட் பந்துவீச்சில் மார்ஷிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 1, இஷாந்த் சர்மா 6 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 97.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது இந்தியா. சாஹா 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியாவில் ஸ்டீவன் ஸ்மித் (28), ஹேண்ட்ஸ்காம்ப் (24) மட்டும் அணிக்கு ரன்கள் சேர்க்க உதவினர். டேவிட் வார்னர் 17, மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். இறுதியாக 35.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா. அஸ்வின் 6, உமேஷ் யாதவ் 2, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டிஆர்எஸ்: ஸ்மித் செயலால் சர்ச்சை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவின் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். அதை எதிர்த்து டிஆர்எஸ் (நடுவர் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு) அடிப்படையில் முறையீடு செய்வதா? வேண்டாமா என்று யோசித்த ஸ்மித், அதுகுறித்து கருத்தறியும் வகையில் பெவிலியனில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்துள்ள பகுதியை பார்த்துக் கொண்டிருந்தார். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் வசம் அப்போது ஒரே ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு தான் இருந்தது.

விதிகளின்படி, ஓய்வு அறை பகுதியில் இருந்து கருத்துகள் கேட்கப்படக் கூடாது. 15 விநாடிகளுக்குள்ளாக களத்திலேயே அந்த முடிவை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், ஸ்மித் செயலை கண்ட போட்டி நடுவர்கள் அவரை அவ்வாறு செயல்படவிடாமல் தடுத்தனர். எனினும், இதைக் கண்டுகொண்ட இந்திய கேப்டன் கோலி, ஸ்மித்துடன் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எனது கேப்டன்ஷிப்பிலேயே இது சிறந்த வெற்றி: கோலி

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி, “தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை, எனது கேப்டன்ஷிப்பிலேயே சிறந்த வெற்றியாக கருதுகிறேன். இதன் மூலம் எந்தவொரு நிலையில் இருந்தும் வெற்றியை நோக்கி முன்னேறுவோம் என்பதை வெளிக்காட்டியுள்ளோம்’ என்றார். ஸ்மித்தின் டிஆர்எஸ் சர்ச்சை குறித்து பேசுகையில், “சிந்திக்காமல் அவ்வாறு செயல்பட்டதாக ஸ்மித் கூறியுள்ளார். ஆனால், 2 முறைக்கும் மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறு செயல்படுவதை பார்த்திருக்கிறேன். அந்த வகையில், அவர்கள் சிந்திக்காமல் செயல்படுவதாகத் தெரியவில்லை’ என்றார்.

தரவரிசை முதலிடம்: இந்திய அணிக்கு ரூ.6.66 கோடி பரிசு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து, டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி. இந்நிலையில், அடுத்த தரவரிசை அறிவிப்பு வெளிவரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் முதலிடத்தில் தொடரவுள்ள இந்திய அணிக்கு ரூ.6.66 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்