Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

Posted On : March 8, 2017

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட (ஏழாவது) வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசிக்குட்பட்ட பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இந்தத் தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஆறு கட்டத் தேர்தல்களில் முறையே, 64%, 65%, 61%, 61%, 57%, 57% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், வாராணசி, காஜிப்பூர், ஜான்பூர், பதோஹி, துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏழாவது கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 535 வேட்பாளர்கள் அங்கு களத்தில் இருந்தனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியே இந்தத் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 23 இடங்களில் கடந்த முறை சமாஜவாதி வெற்றி பெற்றிருந்தது. இம்முறை சமாஜவாதி, பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் மொத்தம் 14,458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தொகுதிகளில் 65 லட்சம் பெண்கள் உள்பட 1.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்தவை. எனவே, அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்தத் தொகுதிகளில் ஒரு மணி நேரம் முன்னதாகவே, அதாவது மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவுபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற இடங்களில் வழக்கம்போல காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராணசி மாவட்டத்துக்குட்பட்ட பேரவைத் தொகுதிகள் அனைத்திலும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். அதுபோலவே அந்தத் தொகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன. 5 மாநில பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பரபரப்பாக இருந்து வந்த அரசியல் களம், தற்போது உச்சகட்டத்தை எட்டியிருப்பதை உணர முடிகிறது.

தேர்தல் ஒத்திவைப்பு: இதனிடையே, ஆலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து, அங்கு புதன்கிழமைக்குப் பதிலாக வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை மாலை 5.30 மணிவரை உத்தரப் பிரதேசத்தில் வாக்குக் கணிப்பு வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்