Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரலுக்குள் இடைத்தேர்தல்?

Posted On : March 8, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், காலியாக உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், சென்னை ஆர்.கே.நகர் உள்ளிட்ட 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டியுள்ளது. அத்தேர்தலில் வாக்களிக்க, நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் 776 எம்.பி.க்கள் என மொத்தம் 4,896 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான மக்களவைத் தலைவர் இத்தேர்தலில் வாக்களிக்க முடியும். எனினும், மக்களவையில் நியமன எம்.பிக்கள் 2 பேரும், மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் 12 பேரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இத்தேர்தலுக்காக தயாராகி வரும் தேர்தல் ஆணையம், தற்போதைய எம்.பி.க்கள் குறித்த விவரங்களையும், காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களையும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களிடம் கடந்த டிசம்பர் மாதம் கோரியிருந்தது. அதேபோல், எம்எல்ஏக்கள் மற்றும் காலியாக உள்ள இடங்கள் தொடர்பாக மாநில சட்டப் பேரவைகளுக்கு கடிதம் எழுதியது.

அதன்படி, மேற்கண்ட விவரங்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர், கேரளத்தின் மலப்புரம் ஆகிய 3 மக்களவை எம்.பி. தொகுதிகள் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் உள்ளிட்ட 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்னும் ஓரிரு நாள்களில் இந்த இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். காலியாக உள்ள தொகுதிகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்பப்படும்’ என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்