Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஜெயலலிதா மரணம்: ஓ.பன்னீர்செல்வம் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

Posted On : March 8, 2017

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை (மார்ச் 8) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருவதுடன், சிபிஐ விசாரணையும் கோரி வருகிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. உலகத்தரத்திலான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டது என எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர், அப்பல்லோ மருத்துவமனை, இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்டவை விளக்கம் அளித்து அவற்றின் அறிக்கையை தமிழக அரசு திங்கள்கிழமை (மார்ச் 6) வெளியிட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதனை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இன்று உண்ணாவிரதம்: இந்த நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்பட திரைத் துறையைச் சேர்ந்த அதிமுகவினர் பலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அதிமுகவின் நிர்வாகிகளைப் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சியில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அவரது இல்லத்துக்கு வரவழைத்து சில தினங்களாக ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

தமிழகம் முழுவதும் போராட்டம்: இதே விவகாரத்துக்காக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே நடைபெறும் போராட்டத்துக்கு வா.மைத்ரேயன் தலைமை வகிக்க உள்ளார். ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர். இதர பகுதிகளில் அந்த மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தலைமை வகிக்க உள்ளனர்.

காவல் துறை அனுமதி: ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முதலில் காவல் துறை அனுமதி தராமல் இருந்தது. தற்போது காவல்துறையின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்