Home / பல்சுவை / மருத்துவம் /

வெற்றிலை மருந்தாகும் விதம்…

Posted On : March 10, 2017

* தாம்பூலம் தரிப்பது என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டுமெல்வது ஆகும். அதனின்று வரும் உமிழ்நீர் வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன் சீரணத்தையும் துரிதப்படுத்தும்.


* வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அந்தி சந்தி என இருவேளை பருகி வரும்போது நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெறலாம். 6 வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.

* தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.

*வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் மூட்டுக்கள் வீக்கமுற்று வலிக்கிறபோதும் மேல் பற்றாகப் போட விரையில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.

வெற்றிலை பற்றிய அகத்தியர் பாடல் ‘ஐயம் அறுங்காண் அதன்சாரங் கொண்டக்காற்பையச் சயித்தியம்போம் பைக் கொடியே – மெய்யின்கடியின் குணம்போகும் காரவெற்றி லைக்குப்படியுமுத் தோடமிதைப் பார்.’

ஐயம் என்னும் சீதள நோய்களை வெற்றிலை போக்கும். காதின் உள்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் கண்டு மிக்க வேதனை தரும் சயித்தியம் என்னும் நோய் வெற்றிலையால் குணமாகும். மேலும், வண்டுக்கடி முதலான விஷக்கடிகள் அத்தனையும் வெற்றிலையை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் தடவுவதால் குணமாகும்.

வாத, பித்த, சிலேத்துமங்களால் வருகிற அனைத்து முத்தோஷ நோய்களும் வெற்றிலையால் போகும் என்பது மேற்கண்ட பாடலின் விளக்கம் ஆகும்.

வெற்றிலை மருத்துவம்

* வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி, அடுக்காக ஒன்றின்மேல் ஒன்றாக மார்பின் மேல் வைத்துக்கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காதபோது பால் கட்டிக்கொண்டு மிக்க வேதனை தரக்கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.

* தலை பாரம் கண்டு தலைவலி ஏற்படும்போது வெற்றிலைச்சாற்றை 3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பாரம் குறையும்.

* உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்டபோது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.

* சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தை யின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.

* இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்துக் கொடுக்க செரியாமை நீங்கும். 50 மி.லி. தேங்காய் எண்ணெயில் 6 வெற்றிலையைப் போட்டு கொதிக்கவிட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின்மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.

* வெற்றிலைச்சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகி வர சிறுநீர் நன்கு வெளியேறும்.

* மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் ஒருமுறை பருகிவர நரம்புகள் பலம் பெறும்.

* வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுவெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டி வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.

* ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது தணலில் காட்டி கசக்கிப்பிழிய வருகிற சாற்றினில் பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், குணமாகும். நெஞ்சுச்சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.

* வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது என்பதாலும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது என்பதாலும் வெற்றிலையை மைய அரைத்து கீல்வாதம்(ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்) விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக்கட்டலாம்.

* வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாகப் போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.

* வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்து விழுங்க பாடகர்களின் தொண்டை வெண்கலத்தைப்போல ஒலியைப் பெருக்கும்.

* வெற்றிலைச்சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

* திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.

* பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.

* வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.

* இரவு படுக்கும்முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.

Comments

தொடர்புடைய செய்திகள்