Home / உலகம் / ஐரோப்பா /

தென்கிழக்கு துருக்கி மோதலில் 2000 பேர் உயிரிழப்பு: ஐ.நா தகவல்

Posted On : March 11, 2017

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் துருக்கிய படைகளின் தீவிரமான வன்முறைகள் மூலம் அமைதியின்மை ஏற்படுத்தப்பட்டதுடன் கடந்த 18 மாதங்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்ததாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு இடையில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் குர்திஷ் இன மக்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள், துருக்கியின் நூற்றுக்கணக்கான கட்டடங்களில் ஏற்பட்டுள்ள அழிவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

துருக்கி மற்றும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டுவருட யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறிவடைந்தது. அதன்பின்னரான காலப்பகுதியில், கொலைகள், காணாமல் போதல் வழக்குகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் ஐ.நா விசாரணையாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் மிகவும் கடுமையான மனித உரிமை மீறல்கள் துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், துருக்கியுடன் தொடர்புடைய மேற்படி அறிக்கைகள் கவலை அளிப்பதாகவும் இது குறித்து நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்