Home / உலகம் / ஐரோப்பா /

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் துருக்கி ஜனாதிபதி

Posted On : March 11, 2017

துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், “எமது நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றப்பாதையில் செல்கின்றன. குறித்த உறவுகள் மிக விரைவாக  வலுவடைந்து வருகின்றமை சிறந்த விடயமாகும்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி, “பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்புத் துறை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தீர்மானித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து கசகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் சமாதான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. குறித்த சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் ரஷ்ய உறவுகள் வலுவடைவதை பிரதிபலிக்கும் வகையில், குறித்த இரு நாடுகளும் கடந்த ஜனவரி மாதம் வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு இணைந்து தாக்குதல்கள் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்