Home / ஆன்மீகம் /

மாசி மகத்தின் மகத்துவம்

Posted On : March 12, 2017

இறை வழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். அதிலும் மகம் நட்சத்திரம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. ‘மகத்தில் பிறந்தார் ஜகத்தை ஆள்வார்’ என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் உமா தேவியார் தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தக்கன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமாதேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார். உமாதேவியாரும் தக்கனுக்கு மகளாக பிறந்தார். அந்த தெய்வக்குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு அன்போடு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் தேவியின் பிறந்த தினமாக அப்புனித நாள் மகத்துவம் பெறுகிறது.

கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும்  வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

ஒருமுறை சமுத்திரராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார்.

தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவவினைகள், பிறவி பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலம் தரும். நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் மாசி மகத்தில் தான். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம். மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.

மாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி” என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்ச்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிகோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாகக் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி’ என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் கந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரதத்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் காரியம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திருஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள்.

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி’ என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறர் பொருட்களை அபகரித்தவர்கள்’ போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது. ஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக  அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது.

மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில்ஸ்ரீலலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

மாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம்’ என்று கூறியிருக்கிறார்கள். இந்த தினங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம். மாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து,  பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவருக்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்து
விடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து,  சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்”

என்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது. இந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்