Home / பல்சுவை / மருத்துவம் /

கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு: மருத்துவர் நூதன பிரசாரம்

Posted On : March 13, 2017

கண் நீர் அழுத்த நோய் (கிளக்கோமா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் கண் மருத்துவர் பி.ரங்கநாதன் தனது கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உலக கிளக்கோமா வாரம் (மார்ச் 12 முதல் 18-ஆம் தேதி வரை) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் “விடியலில் உழவனை தேடி’ எனும் விழிப்புணர்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நாமக்கல் உழவர் சந்தையில் கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கண் மருத்துவர் பி.ரங்கநாதன் தலைமையில், இந்திய மருத்துவர் சங்கத்தின் நாமக்கல் கிளை செயற்குழு உறுப்பினர் பரணி, சமூக ஆர்வலர் பாலாஜி, கல்லூரி மாணவிகள் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ரங்கநாதன் கூறியது:-
கண்ணில் அழுத்தம் அதிகமாவதால் கிளாக்கோமா எனும் நோய் உண்டாக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்டோர் பரிசோதனை செய்வது அவசியம்.
கண்ணாடி அணிந்துள்ளோர், கிளாக்கோமா பாதித்த குடும்பத்தில் பிறந்தோர், ஸ்டீராய்டு- மனநல மாத்திரைகள் சாப்பிடுவோர், சர்க்கரை- ரத்தக் கொதிப்பு- தைராய்டு நோய் உடையோர், கண்களில் அடிபட்டோர், கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டோர் இதற்கான பரிசோதனை செய்துகொள்ள
வேண்டும்.
வலியுடன் கூடிய சிவந்த கண்கள், பொறுக்க முடியாத கண் வலி, விளக்குகளை சுற்றி வானவில் போன்ற வண்ண வளையங்கள், மங்கலான கண் பார்வை, குறுகிய மைய பார்வை, இரவில் பார்வை தடுமாற்றம், கண்ணாடி பார்வை திறன் அடிக்கடி மாறிக்கொண்டே இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் இந்த நோய் பரிசோதனையை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் உடனடியாகச் சென்று, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்