Home / ஆன்மீகம் /

தலசயனப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா, தீர்த்தவாரி

Posted On : March 13, 2017

மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலில் மாசி மகத் தெப்பத் திருவிழா மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் நீராடினர்.
மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் 63-ஆவது திருத்தலமாகும். இக்கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புஷ்கரணி தெப்பக் குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக கோயில் வாகன மண்டபத்தில் இருந்து தலசயனப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பக் குளத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். அங்கு தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் கடலில் மாசி மக தீர்த்தவாரி விழா நடைபெற்றது. இதையொட்டி தலசயனப் பெருமாள், வராக பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் கருட சேவையில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து கடற்கரையை அடைந்தனர்.
அங்கு பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, கடலில் புனித நீராடினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டித் தலைவர் மல்லை ஜனார்த்தனம், கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்