Home / ஆன்மீகம் /

நாகையில் மாசிமகத் தீர்த்தவாரி

Posted On : March 13, 2017

நாகை புதிய கடற்கரையில், மாசிமக விழாவையொட்டி நாகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சிவன், பெருமாள் கோயில் உத்ஸவர்களின் தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில் நாகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள், நாகை புதிய கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாகை செளந்தரராஜப் பெருமாள், நாகை நவநீத கிருஷ்ணன் சுவாமி, பாப்பாகோவில் கஸ்தூரி ரெங்கநாதப் பெருமாள், ஆபரணதாரி தாமோதர நாராயணப் பெருமாள், அந்தனப்பேட்டை நித்ய கல்யாணப் பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளினர்.
அதேபோல, நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி, வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வர சுவாமி, நாகை நடுவதீஸ்வரர், மெய்கண்டமூர்த்தி, தாய் மூகாம்பிகை, நாகை சட்டையப்பர் கோயில்களிலிருந்து மேள, தாளங்களுடன் சுவாமிகள் புறப்பட்டு, நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளினர்.
அனைத்து சுவாமிகளுக்கும் புதிய கடற்கரையில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், ஒவ்வொரு கோயில்களிலிருந்தும் சுவாமி புறப்பாட்டுடன் கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவர் சுவாமிகள் கடலில் இறங்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்