Home / ஆன்மீகம் /

பங்குனி மாத ராசிபலன்கள்

Posted On : March 13, 2017
மேஷம்

உணர்வு பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்கள், அதைவிட உண்மையாக வாழ்வதே மிகச் சிறந்தது என்று நினைப்பவர்கள், நீங்கள். 10ம் தேதிவரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும்.

இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியன் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். மகனுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் வந்துபோகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரன் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

6ந் தேதி வரை புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனை பைசல் செய்வதற்கு புது முறையை யோசிப்பீர்கள். ஆனால் 7ந் தேதி முதல் புதன் வக்ரமாவதால் சோர்வு, களைப்பு, வீண் செலவுகள், அலைச்சல்களெல்லாம் வந்துபோகும்.

ராசிக்கு 6ல் குரு மறைந்து கிடப்பதால் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல அவ்வப்போது இருப்பீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். யூரினரி இன்ஃபெக்‌ஷன், வாயுக் கோளாறால் நெஞ்சு எரிச்சல் வந்துபோகும்.

மாணவ, மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பாருங்கள். மொழி அறிவையும், பொது அறிவையும், அறிவியல் அறிவையும் தரக் கூடிய புத்தகங்களையும் படியுங்கள். கன்னிப்பெண்களே! உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். காய், கனிகளை உண்பது நல்லது.

நண்பர்கள் விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்க்கட்சியினருடன் நட்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் வகைகளாலும் லாபமடைவீர்கள். கேது 11ம் வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியும் கிட்டும். புது முதலீடு செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். மரியாதைக் குறைவான சம்பவங்களும் வந்துபோகும்.

குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். உங்களை விட வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சுத் தொல்லை, எலித் தொல்லைகளை அழிக்க நவீன ரக மருந்துகளை பயன்படுத்துவீர்கள். தோட்டப் பயிர் மூலமாக லாபமடைவீர்கள். நிம்மதியையும், மன தைரியத்தையும் தரக்கூடிய மாதமிது.

ரிஷபம்

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களுடைய சுகாதிபதியான சூரியனும், ராசிநாதன் சுக்கிரனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் நீண்ட நெடுநாட்களாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும்.

மேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 5ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும்.

6ந் தேதி வரை 11ம் வீட்டில் புதன் நிற்பதால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து ஒருபடி உயரும். ஆனால் 7ந் தேதி முதல் புதன் வக்ரமாவதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு 4ல் நீடிப்பதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், முதுகு, மூட்டு வலி வந்து போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. 11ந் தேதி வரை செவ்வாய் 12ம் வீட்டில் ஆட்சிபெற்று நிற்பதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். திடீர் பயணங்கள் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

என்றாலும் கண்டகச் சனி நடைபெறுவதால் சின்னச் சின்ன விவாதங்களும், மனைவிக்கு இடுப்பு வலி, மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். மாணவ, மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை அழைத்துப் பேசும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வேலையாட்களால் வியாபார ரகசியங்கள் கசிய வாய்ப்பிருக்கிறது.

பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கமிஷன், புரோக்கரேஜ், கட்டிட உதிரிபாகங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சகஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! நவீன உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையாலும், அனுபவ அறிவாலும் பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் மாதமிது.

மிதுனம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், வெறுப்பு விருப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகி அரவணைத்துச் செல்லக் கூடியவர்கள். சனிபகவான் வலுவாக 6ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். கடந்த இரண்டு மாத காலமாக உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள் வீடு, மனை வாங்குவோருக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

மனைவிவழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த மாதம் முழுக்க செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுவேலை கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.

குரு 4ல் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். 7ந் தேதி முதல் ராசிநாதன் புதன் வக்ரமாவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, கழுத்து வலி, யூரினரி இன்ஃபெக்‌ஷன், தோலில் நமைச்சலெல்லாம் வந்து செல்லும். மாணவமாணவிகளே! படிப்பில் ஆர்வம் உண்டு. தேர்வையும் நல்ல முறையில் எழுதுவீர்கள். நுழைவுத் தேர்விற்கு ஆயத்தமாவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். செல்போன், லேப் டாப் புதிதாக வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு புகழடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள்.

வியாபார சங்கத்தில் முக்கிய பதவி, பொறுப்புகள் தேடிவரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் களை கட்டும். உணவு, டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்களுக்காகவும் உயரதிகாரிகளிடம் பரிந்து பேசுவீர்கள். சிலருக்கு சம்பளம் கூடும். தற்காலிகப் பணியில் இருந்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். விவசாயிகளே! மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். புதிதாக சிலர் நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

கடகம்

இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையையே பெரிதென நினைக்கும் மனசுடைய நீங்கள், எங்கும் எப்போதும் நல்வழியிலேயே செல்லக் கூடியவர்கள். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உங்களின் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரனும், புதனும் சென்று கொண்டிருப்பதால் செல்வாக்கு கூடும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பழைய நண்பர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். 5ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கெட்ட கனவுகள் அதிகமாக வரும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது வேதனைப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 3ல் குரு அமர்ந்திருப்பதால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது.

எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப்போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். சூரியன் 9ல் நுழைந்திருப்பதால் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். அரசுக் காரியங்கள் தாமதமாகி முடியும்.

மாணவ மாணவிகளே! விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பதுடன், எழுதிப் பார்ப்பதும் நல்லது. தேர்வின்போது மறதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நண்பர்களிடம் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பது குறித்து யோசிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியிலிருந்து விலகுவார்கள்.

வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரரிடம் அனுசரித்துப் போவது நல்லது. புரோக்கரேஜ், பெட்ரோகெமிக்கல், மின்னணு, மின்சார வகைகளால் லாபமடைவீர்கள். செவ்வாய் ஆட்சிபெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும்.

சகஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! நெல், கிழங்கு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

சிம்மம்

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும்.

உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உடன் பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கான வழிவகை பிறக்கும்.

உங்களுடைய ராசிநாதன் சூரியன் 8ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்து காணப்பட்டாலும் குருவின் வீட்டில் அமர்வதால் நியாயமான அலைச்சல், அவசியமான பயணங்கள் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் உரிய காலகட்டத்திற்குள் செலுத்தப் பாருங்கள்.

சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும். மாணவ, மாணவிகளே! தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். மொழி அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மக்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.

வியாபாரத்தில் லாபம் உயரும். போட்டிகள் குறையும் என்றாலும் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புத் தகராறு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் விளைச்சலில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.

கன்னி

ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிக்கும் நீங்கள், எப்பொழுதுமே சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். சனிபகவான் வலுவாக 3ம் வீட்டிலேயே தொடர்ந்து கொண்டிருப்பதால் மனோபலம் கூடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 6ம் தேதி வரை ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், 7ம் தேதி முதல் புதன் வக்ரமாவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, வீண் டென்ஷன், நரம்பு சுளுக்கு வரக்கூடும். உங்கள் ராசியை இந்த மாதம் முழுக்க சூரியன் பார்த்துக் கொண்டேயிருப்பதால் தூக்கம் குறையும்.

முடிந்தால் யோகா, தியானம் செய்யப் பாருங்கள். செவ்வாய் 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிறுசிறு வாகன விபத்துகள், இழப்புகள், ஏமாற்றங்கள், சகோதர வகையில் பிரச்னைகள் வந்துபோகும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குரு ராசிக்குள் அமர்ந்திருப்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும்.

தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, தோலில் நமைச்சல் வந்துபோகும். மாணவ, மாணவிகளே! இரவில் அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். வகுப்பறையில் தேர்வின்போது வினாத்தாளை நிதானமாக படித்துப் பார்த்து அதற்கு தகுந்த விடைகளை எழுதப் பாருங்கள். அவசரத்தில் மாற்றி எழுதி விடாதீர்கள்.

விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். உடல் உஷ்ணத்தால் தலைமுடி உதிரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள்.

கேது வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். செங்கல் சூளை, கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கம் கடைக்காரருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.

செவ்வாய் 8ல் நிற்பதால் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்றவொரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வந்து செல்லும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போங்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.

துலாம்

கரைப்பார், கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் பாதகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் 6ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்து கிடப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.

சாதாரணப் பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் எது சொன்னாலும் அதை பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனப்பழுது வந்து நீங்கும்.

வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால், உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதியான செவ்வாய் பகவான் 10ந் தேதி வரை 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் இருவருக்குள்ளும் குழப்பத்தையும், பிரச்னைகளையும் உண்டாக்குபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடிவடையும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். ஏழரைச்சனி நடைபெறுவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் ராசிக்கு 12ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் வருங்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும்.

மாணவ, மாணவிகளே! உங்களுடைய பொது அறிவு வளரும். தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும். காதலும் கனியும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்கள் அமைவார்கள். இழுபறியாக இருந்து வந்த ஒப்பந்தங்கள் நல்ல விதத்தில் முடியும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை மாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள்.

பங்குதாரர்கள் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் வீண் பழி வரும். வேலைச்சுமை அதிகமாகும். அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பை புரிந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

உங்களைப் பற்றிய தவறான பேச்சு வார்த்தைகளெல்லாம் குறையும். சவாலான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். வீர்யத்தை விட்டு விட்டு காரியத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

விருச்சிகம்

தடைகளைக் கண்டு தளராமல், பீனிக்ஸ் பறவைபோல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்ட நீங்கள், கடின உழைப்பாளிகள். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேபோல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. 30ம் தேதி முதல் புதன் சாதகமாக இல்லாததால் ஒருவித சலிப்பு, சோர்வு, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள், பணப்பற்றாக்குறை யெல்லாம் வந்து போகும்.

ஆனால், ராசிநாதனான செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தள்ளிப்போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

பூமி, சொத்து சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். சுக்கிரன் சாதகமாகயிருப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றிலிருந்து வந்த தடைகள் விலகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். ராசிக்கு 5ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களின் பொறுப்பற்ற போக்கை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அடிவயிற்றில் வலி வந்துபோகும்.

மாணவ, மாணவிகளே! அறிவியல், கணிதப் பாடங்களில் முக்கியமான சமன்பாடுகளையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நண்பர்களிடம் அரட்டைப் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் குழப்பங்களும், தோல்வியும் வந்து போகும். தகுதியில்லாதவர்களை தரமானவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமை சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது. தொகுதி மக்களை தவிர்க்காதீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருந்தாலும் வழக்கமான லாபம் உண்டு.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். லாபம் அதிகரிக்கும். குரு சாதகமாக இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் வரும். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

தனுசு

எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் தோல்விதான் என்பதை உணர்ந்த நீங்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் சமயோஜித புத்தியால் முன்னேறுவீர்கள்.

நட்பு வட்டம் விரிவடையும். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். யதார்த்தமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணரக்கூடிய வாய்ப்பு கிட்டும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும்.

பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த நெருடல்கள் நீங்கும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சனியும், குருவும் சாதகமாக இல்லாததால் செலவுகள் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு உண்டாகும். கடன் பிரச்னையை நினைத்தும் அவ்வப்போது வருந்துவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயமும் வந்து நீங்கும். மாணவமாணவிகளே! தெரிந்த பாடம்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

தேர்வு நேரம் என்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக குடியுங்கள். நினைவாற்றல் பெருகும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! கோபம் குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே செல்வாக்கு கூடும்.

கோஷ்டிப் பூசலும் கட்டுப்பாட்டிற்குள் வரும். கேது 3ல் நிற்பதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். அதேபோல் விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டாகும்.

உணவு, கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உயரதிகாரிகள் உங்களுடைய திறமையை பரிசோதிப்பார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன இடையூறுகளை சமாளிக்க வேண்டி வரும்.

கலைத்துறையினரே! சக கலைஞர்கள் மதிப்பார்கள். வேற்றுமொழி கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளே! மரப்பயிர்கள், மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சாதிக்கும் மாதமிது.

மகரம்

வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்ததுதான் என்பதை உணர்ந்த நீங்கள், இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சியதில்லை. கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து பணப்பற்றாக்குறையையும், காரியத் தடைகளையும் தந்த சூரியன் இப்போது ராசிக்கு 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். புறநகர் பகுதியில் இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு, மனை வாங்கும் சூழல் உண்டாகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் செவ்வாய் சென்று கொண்டிருப்பதால் மனஇறுக்கங்கள் நீங்கும்.

உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இளைய சகோதர வகையில் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடிவரும். விருந்தினர், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

செல்வாக்கு ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

உங்களின் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். புது முதலீடு செய்து, புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாணவ மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் பொதுஅறிவிலும் சிறந்து விளங்குவீர்கள்.

விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். காதலும் இனிக்கும். கல்வியிலும் வெற்றி உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்க்கட்சியினருடைய கேள்விகளுக்கு ஆதார பூர்வமாக பதிலளித்து அசத்துவீர்கள்.

குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வேலையாட்களும் உதவியாக இருப்பார்கள். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். கௌரவப் பதவிகள் கூடிவரும்.

உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. புதிய பொறுப்புகளை உங்களை நம்பி மூத்த அதிகாரிகள் தருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. விவசாயிகளே! மகசூல் பெருகும். மகளுக்கு திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். கலைத்துறையினரே! தெலுங்கு, கன்னட நிறுவனத்திலிருந்து பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவதாகவும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவதாக அமையும் மாதமிது.

கும்பம்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து முன்கோபத்தையும், கண் எரிச்சலையும், வயிற்று வலியையும் தந்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி இருப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்யம் கூடும்.

யதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசுவதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால், சூரியன் 2ல் அமர்ந்திருப்பதுடன், கேதுவும் 2ல் நிற்பதால் பதட்டங்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். உணர்ச்சிவசப்பட்டு அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கண்வலி, காதுவலி, பல் வலி வந்துபோகும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கெமிக்கல், எலக்ட்ரிக்கல், உணவு தொடர்புள்ள கம்பெனி ஷேர்களால் பணம் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரனால் வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். வாகனத்தையும் மாற்றுவீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான கடினமான காரியங்களை எடுத்து செய்யக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும். குடும்பத்திலும், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சச்சரவுகள் வரும்.

ஈகோ பிரச்னைகளையும் விட்டு விட்டு நீங்கள் இருவரும் செயல்படுவது நல்லது. மாணவ மாணவிகளே! நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப் பாருங்கள். சிலர் தடைபட்ட உயர் கல்வியை தொடருவீர்கள்.

அரசியல்வாதிகளே! செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டும் அதிகமாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களும் வருவார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் இப்படியும், அப்படியுமாகத்தான் இருப்பார்கள். அனுசரித்துப் போங்கள்.

உத்யோகத்தில் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். உங்களுடைய உழைப்பையும், நல்ல மனதையும், உடன்பணியாற்றுபவர்களும், சக ஊழியர்களும் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். உங்களை பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார்.

சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும். விவசாயிகளே! தண்ணீர் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற கவலை வரும். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொஞ்சம் கரடுமுரடான பாதையில் பயணிக்க வைத்தாலும் இனிக்கும் மாதமிது.

மீனம்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியன் இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் சோர்வு, களைப்பு, முதுகுவலி, மூட்டுவலி வந்துபோகும். உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லையென்று அலுத்துக் கொள்வீர்கள். பல்வலி, காதுவலி வந்துபோகும்.

உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் உங்கள் தனாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதால் மனஇறுக்கம் குறையும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்தீர்களே! ஆனால், உங்கள் ரசனைக்கேற்ப அமையாமல் போனதே! இந்த மாதத்தில் நீங்கள் விரும்பியபடி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பத்திரப் பதிவும் செய்வீர்கள். தந்தையார் அவ்வப்போது கோபப்பட்டாலும் உங்களுக்கு உதவிகளையும் செய்வார். தந்தையாருக்கு லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். உங்களுடைய ராசிக்கு சாதகமாக சுக்கிரன் இருப்பதால் மனப்பக்குவம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள்.

அறிவுப் பூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அயல்நாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வாகனப்பழுதை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் மனைவி வழியில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்து அதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மாணவ மாணவிகளே! கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேர்வையும் நன்றாக எழுதுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களை உதாசீனப்படுத்திய பங்குதாரர் இப்போது உங்களுடைய அறிவுத் திறமையை பாராட்டுவார்.

வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். உணவு, வாகனம், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதற்கெடுத்தாலும் குறைகூறிய அதிகாரியின் மனம் மாறும்.

உங்களை அதிகாரி புரிந்து கொள்வார். உங்களிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். விவசாயிகளே! எண்ணெய் வித்துகள், காய், கனி வகைகளால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உங்களின் ஆளுமைத் திறமையை அதிகரிப்பதுடன், பூமி, ஆபரணச் சேர்க்கையை தரும் மாதமிது.

Comments

தொடர்புடைய செய்திகள்