Home / சினிமா / இந்திய சினிமா /

விஜய் சேதுபதியின் மனிதத்தன்மைக்குத் தலைவணங்குகிறேன்: உணர்ச்சிவசப்படும் இயக்குநர் சேரன்!

Posted On : March 13, 2017

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தேர்தலை முன்வைத்து நடிகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் அடுத்தப் படத்தை நடிகர் விஜய் சேதுபதியின் உதவியுடன் இயக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில் சேரன் கூறியதாவது:

நான் ஏதோ கஷ்டப்படுறேன்.. படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்குத் தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க… பொருளாதார ரீதியா எனக்கு கஷ்டம் தான். இல்லைனு சொல்லல… ஆனா அது என் வாழ்க்கை… அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால்.

‘நான்’ ‘நான்’ என்று பேசல… ஆனா சொல்ல வேண்டிய நிலை… என்னோட படங்களுக்கு முன்னால உங்க படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும்… இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்தைக் கொடுத்திருக்காங்க… நான் கஷ்டப்படுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா.. இல்ல வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா… எனக்கு 5000 கொடுத்தா என் பிரச்னை தீர்ந்திடும்னா உங்களுக்கும் இனிமேல் மாசம் 5000 சம்பாதிச்சா போதும்ல… ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கனு வைங்க, அப்போ இனிமேல் 30000 தான் உங்களுக்கு சம்பளம்… அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும்.. தயாரா?

யார் கிட்ட வந்து மோதுறீங்கனு தெரிஞ்சு மோதுங்க… நான் படம் பண்றதும், பண்ணாததும் நான் தீர்மானிக்க வேண்டியது… ஒரு வேலைய தொடங்கிட்டு அப்படியே அதை பாதியில் போட்டுட்டு வேற வேலையைப் பாக்குற பழக்கம் எனக்கு இல்லை…. C2Hன்னு ஒரு திட்டம் ஆரம்பிச்சப்போ என்னை மட்டுமே நம்பி 3000 பேர் பணம் முதலீடு பண்ணாங்க… அவங்க கிட்ட நான் பணம் வாங்கியிருக்கேன்… அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வழிவகை செய்யாம நான் படம் எடுக்கப் போனா அது பொறுப்பற்ற தன்மைனு இப்ப வரைக்கும் போராடிட்டு இருக்கேன், படம் பண்றதுக்கு ஒரு மனநிலை வேணும்.

ஒரு விஷயம் தெரியுமா? இப்ப நான் படம் பண்ணப் போறேன்… என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும் சார்… நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க… கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார்… நாம பண்ணலாம் சார் அப்படின்னு ஒரு நடிகர் சொன்னார் பார்த்தீங்களா? அதுதான் மனிதாபிமானம்… உதவி, மாற்று வழி… அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி… அவர்தான் சரியான மனுஷன்… ஒரு மனுஷனோட பிரச்னைக்கு உண்மையான தீர்வு என்னனு பார்க்குற மனிதத்தன்மை.. அவருக்கு நான் தலை வணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும்… தேதி கொடுத்ததுக்கு அல்ல… பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு…

வருது சார் என்னோட படம்…. திரும்ப எங்க வேலைய பாக்கப் போறோம்… அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்… என்று கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்