Home / ஆன்மீகம் /

தெய்வங்கள் திருமணம் காணும் பங்குனி

Posted On : March 14, 2017

பங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். இதை, ‘கல்யாண விரத நாள்’ என்றும் போற்றுவர். தெய்வத் திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராணங்கள். ஸ்ரீராமன் சீதாதேவி; லட்சுமணன் ஊர்மிளை; பரதன் மாண்டவி; சத்ருக்னன் ஸ்ருதகீர்த்தி ஆகியோரது திருமணம்… பங்குனி உத்திர திருநாளில், மிதிலை நகரில் வைத்து நடைபெற்றதாம். ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர்; தேவேந்திரன் இந்திராணி; பிரம்மன் கலைவாணி ஆகியோரது திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் இந்தப் புனித நாளில்தான். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஸ்ரீமீனாட்சி தேவியை மணந்து ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக தரிசனம் தந்ததும் பங்குனி உத்திர திருநாளில்தான்.

திருமணத் தடை உள்ளவர்கள், பங்குனி உத்திரத்தன்று முறைப்படி விரதம் கடைப்பிடித்து, தம்பதி சமேதராகத் திகழும் தெய்வங்களை பூஜித்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்குமாம். பங்குனி உத்திரத்தன்று திருவிளக்கு தீபத்தில், சிவபெருமானும் பார்வதிதேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். பங்குனி உத்திர பூஜை முடித்ததும் வயதான ஏழைத் தம்பதிக்கு உணவிட்டு உபசரித்தால் புண்ணியம் சேரும். உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்; உத்திர நட்சத்திரம் பூரண சந்திரனுடன் பொருந்தும் நாள் பங்குனி உத்திரம். சூரியன் சந்திரன் இருவரது தொடர்பும் பெற்றிருப்பதால் இந்தத் திருநாளுக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

முறைப்படி பங்குனி உத்திர விரதம் இருப்பதுடன், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, ஆலயங்களுக்கு வரும் அடியவர்களுக்கு நீர்மோர் அளிப்பதால் பாவம் நீங்கும்; பகை விலகும்; பெரும் புண்ணியம் சேரும். முருகக் கடவுளுக்கு உகந்த திருநாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத் தக்கது. இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்து கொண்டதும் வள்ளிக் குறத்தி அவதரித்த பெருமையும் பங்குனி உத்திரத்துக்கு உண்டு. இந்த நன்னாளை விரத நாளாக அனுஷ்டித்து தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வணங்கி வழிபட்டால், கன்னியருக்கு விரைவில் திருமணம் நடக்கும். மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

முருகப் பெருமானுக்குரிய திருத்தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சவமாகவும் கொண்டாடப் படுகிறது. பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்கள், முடி காணிக்கை அளித்தும், காவடி பிரார்த்தனைகளை நிறைவேற்றியும் அலகு குத்திக் கொண்டும் கந்தவேளை வழிபட்டு மகிழ்வார்கள்.
சுவாமி ஐயப்பனின் அவதாரத் திருநாளும் பங்குனி உத்திரமே. இந்தத் திருநாளன்று சபரிமலையில், சுவாமி ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் நடைபெறும்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் காட்சி தந்த நாளும் இதுதான். அன்று திருமழப்பாடியில் நடைபெறும் நந்திதேவர் கல்யாணத்தை தரிசித்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம். ‘நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்’ என்பது பழமொழி!

பங்குனி உத்திர நாளில்தான் காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றார்.‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக… பெற்ற பயனை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் பலி விழாவாகவும் திகழ்ந்துள்ளது பங்குனி உத்திரம். எனவே, இந்த நாளில் எல்லோருக்கும் அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்குவார்களாம் பக்தர்கள்.

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நாள் பங்குனி உத்திரம். இந்த மாதத்தில் பெய்யும் மழையை, ‘பங்குனிப் பழம்’ என்பர் விவசாயிகள். திருவையாறு அருகில் உள்ளது திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் லிங்கத் திருமேனியை, சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதை தரிசிக்கலாம். கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் ஆலயத்தில் உள்ள தல விருட்சம், பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் பூ பூக்குமாம்! இங்குள்ள ஸ்ரீசுப்ரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்