Home / உலகம் / ஐரோப்பா /

பிரெக்ஸிட் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted On : March 15, 2017

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் மசோதாவில் நாடாளுமன்ற மேலவை செய்த திருத்தங்களை நிராகரித்து கீழவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தங்கள் தேவை என மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழவையில் மீண்டும் அதன் மீது விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேலவையில் திருத்தங்களை எதிர்த்து 335 உறுப்பினர்களும், ஆதரித்து 287 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இனி அந்த மசோதா மீண்டும் மேலவையில் தாக்கல் செய்யப்படும். மசோதா மீது இனி எந்த விவாதமும் இல்லாமல், அதே வடிவில் மேலவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலை. “நாட்டு மக்களும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ள நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் முட்டுக்கட்டை போடாமல் விரைவில் ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும்” என்று பிரெக்ஸிட் விவகார அமைச்சர் டேவிட் டேவிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை மசோதாவில் கொண்டு வர வேண்டும் என்று மேலவை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரங்களைப் பின்னர் உத்தரவுகள் மூலமாக நடைமுறைப்படுத்தலாம் என்று பிரதமர் தெரசா மே கூறி வருகிறார். தற்போதைய மசோதா நிறைவேற்றம் அவருக்குத் தனிப்பட்ட வெற்றியாகக் கருதப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்