Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஹெட்போன் வெடித்து விபத்து: பெண் விமான பயணி காயம்

Posted On : March 15, 2017

சிட்னி: ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் பேட்டரியில் இயங்கும் ஹெட்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பெண் பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கடந்த பிப்-19ஆம் தேதி பீய்ஜிங்கில் இருந்து மெல்போர்ன் சென்ற அப்பெண், தனது மொபைல் போனில் ஹெட்போன் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெட்போன் வெடித்துச் சிதறியதில் அப்பெண்ணின் கன்னம், கையில் தீக்காயம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு படையிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகத்தில் எரிச்சல் ஏற்பட்டதையடுத்து, கழுத்தைச் சுற்றி போட்டிருந்த ஹெட் போனை கீழே போட்டதாக அப்பெண் கூறினார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி ஹெட்போனில் இருந்து வந்த புகையை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருளான ஹெட்செட்டில் தீப்பிடித்ததால் அதன் புகை விமானம் எங்கும் பரவி மற்ற பயணிகளுக்கும் சிரமத்தை உண்டாக்கியுள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு விமான பயணத்தின்போது சாம்சங் கேலக்சி நோட் 7 பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று எளிதாக வெடிக்கக் கூடிய லித்தியம் ரக பேட்டரி சார்ந்த இயந்திரங்களை விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது, அதற்கு விமான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்