Home / சினிமா / திரைவிமர்சனம் /

முப்பரிமாணம் – விமர்சனம்

Posted On : March 18, 2017

நடிப்பு: சாந்தனு பாக்யராஜ், சிருஷ்டி டாங்கே, ஸ்கந்தா அசோக், ரவி பிரகாஷ், தம்பி ராமய்யா, அப்புக்குட்டி.
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ராசாமதி
தயாரிப்பு: ஷாமையாலயா
கிரியேஷன் இயக்கம்: அதிரூபன்

பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜும், சிருஷ் டாங்கேவும் பால்ய பருவத்து பள்ளித் தோழர்கள்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜும், சிருஷ் டாங்கேவும் பால்ய பருவத்து பள்ளித் தோழர்கள். சிருஷ்டியின் குடும்பம் காதலுக்குப் பரம எதிரி. காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காக, சொந்த தங்கையையே போட்டுத்தள்ளுகிறார் ரவி பிரகாஷ். இதைக் கண்டுபிடித்து கைது செய்கிறார், சாந்தனுவின் தந்தை. இதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தொடர்ந்து, கோவைக்கு சாந்தனு மாறுதலாகி வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊருக்கே செல்கிறது சாந்தனுவின் குடும்பம். பழைய பகை அப்படியே இருக்கும்போது, சிருஷ்டியைக் காதலிக்கிறார் சாந்தனு. வழக்கம்போல் காதலுக்கு கடும் எதிர்ப்பு. தங்கையைக் கொன்றதைப்போல், அண்ணன் மகளையும் கொல்லத் துடிக்கிறார் ரவி பிரகாஷ்.

அதிலிருந்து சிருஷ்டியை எப்படி சாந்தனு காப்பாற்றுகிறார் என்பது வழக்கமான கதை. ஆனால், இதில் சிலருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது என்ன என்பது, திரைக்கதை. சாந்தனுக்கு இது முக்கியமான படம் என்பதால், அதிக சிரத்தையுடன் நடித்திருக்கிறார். ஜாலியாக சிருஷ்டியை வட்டமடிப்பதில் இருந்து, கண்ணில் கொலைவெறியுடன் எதிரிகளைத் துரத்துவது வரை நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார். நடிப்பில் நல்ல முன்னேற்றம். சிருஷ்டிக்கும் நடிக்க மிகப் பெரிய வாய்ப்பு. கதையோட்டத்தை தீர்மானிப்பதே அவர்தான்.

கிளைமாக்ஸ் சஸ்பென்சைக் கூட்டுகிறது. தம்பி ராமய்யா, அப்புக்குட்டி, சுவாமிநாதன் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு உதவுகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு காதலுக்கும், ஆக்‌ஷனுக்கும் தனி கலர் டோன் கொடுக்கிறது. கதை தற்போது நடக்கிறதா அல்லது பிளாஷ்பேக்கா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறது. எடிட்டர் இன்னும்கூட மெனக்கெட்டிருக்கலாம். கதையின் மையப்புள்ளியான திடீர் திருப்பம் திகைக்க வைக்கிறது. சாந்தனு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து அதகளம் செய்யும் அளவுக்கு திரைக்கதையில் பெரிய அழுத்தம் இல்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்