Home / சினிமா / இந்திய சினிமா /

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்

Posted On : March 20, 2017

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென்று இசைப்பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது முகநூல் பதிவில் கருத்து கூறியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா தமக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளார். நண்பர்கள், இசைப்பிரியர்களுக்கு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தனது பாடல்களை அனுமதியின்றி மேடையில் பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அனுமதியின்றி பாடினால் வழக்கு தொடரப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் இளையராஜா தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி எஸ்.பி.பி.50 என்ற பெயரில் பல நாடுகளில் அவரது குழு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது.

இதையடுத்தே எஸ்.பி.பி.க்கு இளைராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் நோட்டீஸ் குறித்து, தனது அதிகார முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் தமக்கு இல்லையென்று கூறியுள்ளார். அமெரி்க்காவில் இசை கச்சேரி நடத்தும்போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தான் தெரியவில்லை, என்பது அவரது கேள்வி. தானும், தனது அணியினரும் இனி இளையராஜா பாடல்களை மேடையில் பாடமாட்டோம் என எஸ்.பி.பி. கூறியுள்ளார். இளையராஜா தவிர மற்ற இசையமைப்பாளர்களின் இசையில், தான் பாடியுள்ள பாடல்களை கச்சேரியில் பாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்