Home / சினிமா / திரைவிமர்சனம் /

புரூஸ்லீ – விமர்சனம்

Posted On : March 20, 2017

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார்,  கீர்த்தி கர்பன்தா, ஆனந்தராஜ், பாலசரவணன், முனீஸ்காந்த்,
ராஜேந்திரன், மன்சூர் அலிகான்.
ஒளிப்பதிவு: பி.வி.சங்கர்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பு: கெனன்யா பிலிம்ஸ்,
லிங்க பைரவி கிரியேஷன்ஸ்.
இயக்கம்: பிரசாந்த் பாண்டியராஜ்

 

பெயரில் தான் புரூஸ்லீ. நிஜத்தில் செம பயந்தாங்கொள்ளி, ஜி.வி.பிரகாஷ் குமார். புரூஸ்லீ படம் பார்த்தபோது வீராவேசம் கொண்டதால், அம்மா அந்தப் பெயரைச் சூட்டினாராம். ஜி.வியின் காதலி கீர்த்தி கர்பன்தா, நண்பன் பாலசரவணன். இவரது காதலி ஷாதிகா. கூலிப்படைத் தலைவன் முனீஸ்காந்த், அமைச்சர் மன்சூர் அலிகானைக் கொலை செய்ததை கீர்த்தி போட்டோ எடுத்துவிடுகிறார். அதை மன்சூர் மகனிடம் தர முயற்சிக்க, அப்பாவின் கொலைக்கு அவரும் உடந்தை என்ற விஷயம் தெரிகிறது. தெரிந்த வக்கீலிடம் சொல்லச் சென்றால், அவரும் முனீஸ்காந்த் விசுவாசி என்று புரிகிறது. கமிஷனரிடம் போட்டோக்களைக் கொடுத்தால், அதைக் கொண்டு போய் முனீஸ்காந்திடம் கொடுக்கிறார். இப்படி அடிமேல் அடி விழுவதால் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறும் ஜி.வி., கீர்த்தி, பாலசரவணன் மூவரும், பீலா ரவுடி ராஜேந்திரனின் உதவியை நாடுகின்றனர்.

அதற்குள் அவர்களைக் கண்டுபிடித்துவிடும் முனீஸ்காந்த் கோஷ்டி, அனைவரையும் கட்டி வைத்து அடிக்கின்றனர். இதற்கிடையே போலீஸ் ஆனந்தராஜ் என்ட்ரியாகிறார். கடைசியில் பயந்தாங்கொள்ளி ஜி.வி என்ன செய்தார் என்பது கிளைமாக்ஸ்.எதைக்கண்டாலும் பயப்படும் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ், நடிப்பு மற்றும் நடனத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார். பாடல் காட்சியில் கீர்த்தியுடன் அதிக நெருக்கம் காட்டியிருக்கிறார். ஆனால், அவர்களுடைய காதலில் அழுத்தம் இல்லாததால் ஈர்க்கவில்லை.

பாலசரவணன் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவே பல இடங்களில் ‘ஓவர்டோஸ்’ ஆகிவிடுகிறது. ‘காட்ஃபாதர்’ என்று முனீஸ்காந்துக்கு பில்ட்-அப் கொடுத்திருக்கிறார்கள். கடைசிவரை அவர் எதுவும் சாதிக்கவில்லை. ராஜேந்திரன், வர வர ஒரே மாதிரி நடித்து கடுப்பேற்றுகிறார். ஆனந்தராஜ், மன்சூர் இருவரும், கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பி.வி.சங்கரின் கேமிரா, ஆறுதல். ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘சுகர்மின்ட்டுகாரி’, கேட்கும் ரகம். பின்னணி இசை ஓ.கே. புதியவர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். கதையில் வலு இல்லை. திரைக்கதையிலும், காட்சி அமைப்புகளிலும் புதுமை இல்லை. ஹீரோ, ஹீரோவின் காதலைச் சொல்வதா? வில்லன் கோஷ்டியின் வெறியாட்டத்தைச் சொல்வதா என்று இயக்குனர் ரொம்பவே குழம்பியிருக்கிறார்.

Comments

தொடர்புடைய செய்திகள்