Home / சினிமா / ஹாலிவுட் /

ஹாலிவுட் அந்நியன்!

Posted On : March 21, 2017

‘சந்திரமுகி’, ‘அந்நியன்’ போன்ற திரைப்படங்கள் மூலமாக ‘ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி’ என்கிற உளவியல் நோய் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானதுதான். ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் ‘ஸ்ப்ளிட்’, இந்த மனநோயை வைத்து கதையாக்கம் செய்திருப்பதில் உச்சம் கண்டிருக்கிறது.சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஹீரோவின் மூளை தன்னுடைய 23 கேரக்டர்களாக ‘ஸ்ப்ளிட்’ செய்துகொள்கிறது. தன்னுடைய தனித்துவத்தை இழந்து வேறு வேறு பாத்திரங்களாக வாழும் அவனது கதைதான் படம். அதில் ஒரு கேரக்டருக்கு பெண்களை ஆடையின்றி நடனமாடவைத்து கண்டு ரசிப்பதில் ஆர்வம். எனவே, மூன்று பெண்களை கடத்தி வைத்து இதுபோல செய்கிறது. இவர்கள் தப்பிக்க முயற்சிக்க, சிக்கிக் கொண்டு தனித்தனி அறைகளில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அதில் ஒரு பெண், நாயகனின் சிதறுண்ட மனநிலையைப் புரிந்து கொண்டு நேக்காக பேசி தப்பிக்க முயற்சிக்கிறாள்.

இதற்கிடையே ஹீரோ தன்னுடைய மனநலப் பாதிப்புக்கு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவிடம் 23 கேரக்டர்கள் மட்டுமின்றி 24வதாக ஓர் ஆபத்தான கேரக்டர் ஒளிந்து கொண்டிருப்பதை கண்டுகொள்கிறார். அவரிடம் மாட்டிய மூன்று பெண்களுக்கும் இந்த கேரக்டரால் ஆபத்து ஏற்படாவண்ணம் தடுக்க முயற்சிக்கிறார். படத்தின் ஸ்பெஷலே ஹீரோவாக நடித்திருக்கும் ஜேம்ஸ் மேக்அவாய்தான்.ஹாய் என்று கதவருகே அமர்ந்து ஷாக் கொடுக்கும் பேர்ரி, ரிமூவ் யுவர் ஷர்ட் என்று மாட்டிக் கொண்ட பெண்களுக்கு ஆர்டர் கொடுக்கும் டெனிஸ், ப்ளீஸ் டேக் யுவர் சீட் என்று நாகரிகமாக பேசும் பேட்ரிசியா என்கிற பெண், திஸ் ஈஸ் மை விண்டோ என்று ஓவியத்தை திகிலாக சுட்டிக்காட்டும் ஹெட்விக் என்று ஹீரோ ஒவ்வொரு கேரக்டராக மாறும்போதும் நடிப்பில் காட்டியிருக்கும் பரிமாணங்கள் ஆச்சரியத்தில் நம்மை உறையவைக்கின்றன.

சின்னச் சின்ன அறைகள்.. அவற்றில் நகரும் ‘திக்… திக்..’ காட்சிகளுக்கு பின்னணி இசையமைப்பும், கேமராவும் மிகத்துல்லியமாக துணை செய்கின்றன. இருபத்து மூன்று கேரக்டர்கள் என்பதற்காக அத்தனையையும் காட்டி பார்வையாளர்களை குழப்பாமல் அதில் முக்கியமான நான்கு கேரக்டர்களை மட்டும் சரியாக வடிவமைத்துக் காட்டும் விஷயத்தில் இயக்குநருக்கு சபாஷ் போடலாம். இயக்குநர் வேறு யாருமல்ல, அமெரிக்க வாழ் இந்திய இயக்குநரான மனோஜ் நைட் சியாமளன்தான்.அடுத்த ஆண்டு ஆஸ்கர் பட்டியலில் ‘ஸ்ப்ளிட்’ எத்தனை பிரிவுகளில் விருது வெல்லப் போகிறது என்பதுதான் இப்போது ஹாலிவுட்டில் ஹாட் டாக்.

Comments

தொடர்புடைய செய்திகள்