Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மனியில் வசிப்பவரா நீங்கள்? அரசின் கடுமையான வரி சட்டம் அமுல்

Posted On : March 25, 2017

ஜேர்மனியில் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வெளிநாட்டு சாரதிகளுக்கு அந்நாட்டு அரசு சுங்கவரி விதிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜேர்மனியில் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வெளிநாட்டு சாரதிகளுக்கு கடுமையான சுங்கவரி விதிக்கும் திட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கிடையே அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனி பாராளுமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சாரதிகளுக்கு சுங்கவரி விதிக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.

ஆனால் குறித்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அந்த திட்டத்தை அமுல்படுத்தாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிர விவாதங்களுக்கு முடிவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜேர்மனி அரசு முடிவுக்கு வந்துள்ளது.

இத்திட்டமானது வரும் 2019 ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள 13,000 கி.மீ நீளம் கொண்ட நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணிகளுக்காக ஜேர்மனி குடிமக்கள் வரி செலுத்த உள்ளனர். மட்டுமின்றி 39,000 கி,மீ நீளம் கொண்ட நெடுஞ்சாலை வரம்புக்கு உட்படாத சாலைகளை பயன்படுத்தவும் வரி செலுத்த வேண்டும்.

குடியிருப்பாளர்களுக்கு சுங்கவரி

ஜேர்மனியில் குடியிருக்கும் அனைத்து சாரதிகளும் அவர்களது வங்கி கணக்கு வழியாக வருடாந்தர சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.

குறித்த கட்டணமானது அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தை பொறுத்து மாறுபடும். டீசல் வாகனங்களை விட குறைவாக பெட்ரோல் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படும்.

சுங்கவரி கட்டணம் என்பது அதிகபட்சம் 130 யூரோவாகவும் குறிந்தபட்சம் 67 யூரோவாகவும் இருக்கும்.

வெளிநாட்டு சாரதிகளுக்கு சுங்கவரி

வெளிநாட்டு சாரதிகளும் வருடாந்தர சுங்கவரி கட்டணம் செலுத்தலாம். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

10 நாட்களுக்கான சுங்கவரி கட்டணம் ஒன்று, இதில் 2.50 யூரோ முதல் 25 யூரோ வரை செலுத்த வேண்டும். அல்லது 2 மாதத்திற்கு மொத்தமாக சுங்கவரி செலுத்தலாம், அது 7 யூரோ முதல் 50 யூரோ வரை குறுப்பிட்ட வாகனத்தை பொறுத்து மாறுபடும்.

ஜேர்மன் குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு

சுங்கவரி கட்டணம் செலுத்தும் ஜேர்மனி குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடாக மிக குறைவான வாகன வரி செலுத்தினால் போதும் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை பயன்படுத்தும் ஜேர்மனி குடியிருப்பாளர்களுக்கு மிக அதிக தள்ளுபடி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

இதில் குறிப்பாக, நெடுஞ்சாலை அல்லது மத்திய அரசு சார்ந்த சாலைகளை பயன்படுத்தாத ஜேர்மனி குடியிருப்பாளர்கள் செலுத்தும் வருடாந்தர சுங்கவரி கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் வாகன உரிமை தகடுகளை அதிகாரிகள் சோதனையிட்டு வருவார்கள். இதில் சுங்கவரி செலுத்தாத சாரதிகள் சிக்கினால் அவர்களுக்கு அபராதமாக அதிகாரிகளால் இதுவரை முடிவு செய்யப்படாத அளவுக்கு தொகையை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது வெளிநாட்டு சாரதிகளுக்கும் பொருந்தும் என அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.

இதனிடையே குறித்த சுங்கவரி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜேர்மனியின் அண்டை நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்