Home / உலகம் / ஜேர்மனி /

துருக்கியின் அரசியலமைப்பு தொடர்பில் ஜேர்மனியில் வாக்களிப்பு ஆரம்பம்

Posted On : March 27, 2017

ஜேர்மனியில் வாழும் துருக்கி இன மக்கள் இன்று (திங்கட்கிழமை) துருக்கியின் அரசியலமைப்பு குறித்த கருத்துக்கணிப்பில் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு விரிவான அதிகாரங்களை கையளிப்பது தொடர்பிலேயே குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுகின்றது.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் அமைந்துள்ள துருக்கியின் துணைத் தூதரகத்தின் முன்றலில் பல துருக்கி இன மக்கள் வரிசையில் கூடியுள்ளமை இது தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் பதிவாகியுள்ளது.

வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்த அதே சமயம், குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஆர்ப்பாட்டக்காரர்களும் துணைத் தூதரகத்தின் வாசலில் கூடியிருந்தனர்.

வாக்களிக்க வந்த பொதுமக்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “துருக்கியின் ஸ்திரத்தன்மை நீடிக்க வேண்டும் என்பதாலேயே நான் இங்கு வாக்களிக்க வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றொருவர், “இந்த கருத்துக்கணிப்பில் ‘இல்லை’ என வாக்களிக்கும் பொருட்டே நான் இங்கு வந்தேன். துருக்கியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டே நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரங்களை கையளிக்கும் குறித்த கருத்துக்கணிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி துருக்கியில் நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments

தொடர்புடைய செய்திகள்