Home / சினிமா / இந்திய சினிமா /

அரசகுலம்

Posted On : April 6, 2017

நாயகன் ரத்தன் மௌலி படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பா அந்த ஊரிலேயே பெரிய மனிதராக வலம் வருகிறார். அதேஊரில் டீச்சராக பணிபுரியும் ராஜஸ்ரீ, தனது மகளான நாயகி நாயனா நாயரை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்..

ஒருநாள் வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நாயகனும் நாயகியும் ஒருகட்டத்தில் காதலர்களாகிறார்கள். இவர்களுடைய காதல் ராஜஸ்ரீக்கு தெரியவரவே, இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், நாயகனோ தனது வீட்டாரை சென்று ராஜஸ்ரீயிடம் நாயனாவை பெண் கேட்க செல்ல, பிறகு ராஜஸ்ரீ சம்மதிக்கிறார்.

இதற்கிடையில், நாயகன் தனது நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார். வேறு ஜாதி பையனை திருமணம் முடித்ததால் பெண்ணின் அப்பா, இதுகுறித்து நாயகனின் அப்பாவிடம் முறையிடுகிறார். நாயகனின் அப்பா தனது மகன் செய்ததும் சரிதான் என்று தீர்ப்பு சொல்ல, அந்த பெண்ணின் அப்பாவுக்கு நாயகனின் அப்பா மீது பகை உருவாகிறது.

ஏற்கெனவே, நாயகனின் அப்பா மீது பகையில் இருக்கும் ராஜசிம்மாவுடன் அந்த பெண்ணின் அப்பாவும் சேர்ந்துகொண்டு, நாயகனையும், அவரது அப்பாவையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்… மறுமுனையில், ரத்தனுக்கும், நாயனாவுக்கும் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, நாயகனின் வீட்டில் உள்ள ஆல்பத்தில் இருக்கும் ஒருவருடைய புகைப்படத்தை பார்த்ததும், ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.

அந்த புகைப்படத்தில் இருந்தது யார்? எதற்காக ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். எதிரிகளிடம் இருந்து நாயகனும், நாயகனின் அப்பாவும் தப்பித்தார்களா? காதலர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ரத்தன் மௌலி இளமை துள்ளலுடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். நாயகி நாயனா நாயர் முகத்தில் ரொம்பவும் முதிர்ச்சி தெரிகிறது. நடிப்பில் ஓ.கே. ரகம்தான்..

நாயகனின் அப்பாவாக வருபவர் பெரிய மனிதராக பளிச்சிடுகிறார். வீட்டில் உள்ளவர்களுடன் நட்பாக பழகும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ராஜஸ்ரீ, தனது அனுபவ நடிப்பில் கவர்கிறார். கொடுமைக்கார தாயாக இவர் நடிக்கும் காட்சிகளில் நமக்கே அவருக்கு மேல் கோபம் வருகிறது. அந்தளவுக்கு எதார்த்தமாக தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மா பார்வையால் மிரட்டியிருக்கிறார்.

இயக்குனர் குமார் மாறன் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த படம் எடுத்தார் என்றே தெரியவில்லை. இந்த படத்தில் நடித்தவர்களை குறைகூறுவதைவிட, இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கிய இவரைத்தான் நிறைய குறை கூறவேண்டியிருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் இவர் சொன்னதை செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால், இவர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. படத்தின் இறுதிவரைக்கும் படத்தின் கதை என்னவென்பதை நாம் தேட வேண்டியிருக்கிறது.

எஸ்.சந்திரசேகரின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் இருக்கிறது. வேலன் சகாதேவனின் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் பெரிய அளவில் எடுபடவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த படத்திற்காக கஷ்டப்பட்ட அனைவரின் உழைப்பையும் இயக்குனர் வீணடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

மொத்தத்தில் ‘அரசகுலம்’ நாசம்.

Comments

தொடர்புடைய செய்திகள்