Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் பெட்ரோல் நிலைய ஊழியர் படுகொலை

Posted On : April 8, 2017

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஜீஷான் அக்பர் (வயது 31). இவர் ஆஸ்திரேலிய நாட்டில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கால்டெக் சர்வீஸ் என்ற பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு, இவரை சுமார் 15 அல்லது 16 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் படுகொலை செய்துவிட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை சக ஊழியர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், அவரை படுகொலை செய்த 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் ரத்தத்தால் ‘ஐ.எஸ்.’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இந்த படுகொலையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

அந்த கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக நியூசவுத் வேல்ஸ் மாகாண துணை போலீஸ் கமி‌ஷனர் கேதரின் பர்ன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே இரு சிறுவர்களில் ஒருவரின் தாய், தனது மகன் அண்மைக்காலமாக மத அடிப்படை வாதத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்ததாக கூறியதாக ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ ஏடு கூறி உள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜீஷான் அக்பர், 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இந்த சம்பவம், ஆஸ்திரேலியா வாழ் பாகிஸ்தானியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்