Home / சினிமா / ஹாலிவுட் /

22 நிமிடங்கள்

Posted On : April 8, 2017

ரஷ்யாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பல டாங்கர்கள் நிறைய எரிபொருள்களை ஏற்றிக் கொண்டு கடலில் செல்கிறது. ஏடன் வளைகுடாவை தாண்டும் சமயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் அந்த கப்பல் சிறைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள், டேங்கர்கள் அனைத்தையும் கடற் கொள்ளையர்கள் கைப்பற்றுகின்றனர். இதையடுத்து அவர்களை மீட்க ரஷ்ய அரசு சார்பில், மீட்புக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த மீட்புக்குழுவில் ஒருவராக வரும் நாயகன் டெனிஸ் நிகிஃபோரவ் உள்ளிட்ட ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஏமன் வளைகுடாவிற்கு விரைந்து, சோமாலிய கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சோமாலிய கொள்ளையர்களும் பதில் தாக்குதல் நடத்த, திணறிய ரஷ்ய ராணுவம் கரைக்கு திரும்புகிறது. இதில் டெனிஸ் மட்டும் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விடுகிறார். கடல் அலைகளில் சிக்கிக் கொள்ளும் டெனிசை மீட்கும் சோமாலிய கொள்ளையர்கள், அவரை பணயக் கைதியாக வைத்து ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்நிலையில், கடற் கொள்ளையர்களில் ஒருவன் டெனிசுக்கு, அவ்வப்போது சில உதவிகளை செய்து வருகிறான். அவனது உதவியுடன் கப்பலில் இருந்தபடியே, ரஷ்ய ராணுவத்திற்கு ஒளி மூலமாக டெனிஸ் சில சில தகவல்களை அனுப்பி வைக்கிறார். மேலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளுக்கு தேவையான உணவுகளையும் அவ்வப்போது அளித்து வருகிறார். ஒருகட்டத்தில் டெனிசுக்கு உதவி செய்யும் இளைஞனை, கொள்ளையர்கள் கொன்று விடுகின்றனர்.

மறுபக்கம் ரஷ்ய ராணுவம், போரில் கைதேர்ந்த ராணுவ வீரர்களை கப்பலுக்கு அனுப்பி வைக்கிறது. கப்பலை மீட்க வரும் அந்த குழு 22 நிமிடங்களில் கடற்படை கொள்ளையர்களை கொன்றுவிட்டு கப்பலை மீட்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது. 22 நிமிடங்களில் கப்பலை மீட்பது அசாத்தியமான ஒன்று என்பதால், அதற்கேற்ற கடற்படை அதிகாரிகளையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு செல்லும் ரஷ்ய ராணுவ படை, 22 நிமிடங்களில் கப்பலை எப்படி மீட்கிறது என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.
படத்தின் நாயகன் டெனிஸ் ஒரு கப்பற்படை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக கடல் அலைகளில் சிக்கிக் கொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது. கப்பலின் தளபதியாக வரும் விக்டர் சுக்ரோகோவ், மகார் சேப்ரோஸ்கி, எகாட்ரினா, அலெக்சாண்டர் காப்ளின், பீட்டர் கோரோலோவ், எப்ரா டோவ் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கின்றனர்.

2014-லேயே இப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகியது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் 3 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பது சிறப்பு. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்ததற்காக இயக்குநர் வேசிலி செரிகோவ்வை பாராட்டலாம்…

டிமிட்ரி யாஷான்கோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. குறிப்பாக ஆழ்கடலில் அலைகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு ப்ளஸ். இவான் உரியுபினின் பின்னணி இசை கூடுதல் பலம்.

மொத்தத்தில் `22 நிமிடங்கள்’ விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்