Home / சினிமா / திரைவிமர்சனம் /

சிவலிங்கா

Posted On : April 15, 2017

சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.

ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.

ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் செல்கிறது. சிபிசிஐடியில் பெரிய போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கும், ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு, சக்தி கொலை வழக்கு லாரன்ஸ் வசம் செல்கிறது. அவர் இதைப்பற்றி விசாரிப்பதற்காக தனது மனைவியுடன் வேலூரில் இருக்கும் ஒரு பங்களாவில் குடியேறுகிறார்.

அங்கு தங்கியதும் அவ்வவ்போது சில அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் திருட வந்த வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக் கொள்கிறார். தான் சிபிசிஐடி என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.

இந்நிலையில், ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒருகட்டத்தில் ரித்திகாவின் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து இருப்பது லாரன்ஸ் மற்றும் வடிவேலுக்கு தெரியவர, அந்த ஆவி கொலை செய்யப்பட்ட சக்தியின் ஆவிதான் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

சக்தியின் ஆவி ரித்திகா சிங்கின் உடம்பில் புகுந்துகொண்டு, தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. அந்த ஆவியின் ஆசையை நிறைவேற்றினால்தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், ராகவா லாரன்ஸ் அதன்பிறகு என்ன முடிவெடுத்தார்? சக்தியை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொன்றார்கள்? சக்தியின் கொன்றவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதை திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக வரும் ராகவா லாரன்ஸ் நடனம், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லாவற்றையும் ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். பேய் படங்களில் நடிக்க இவருக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை. அந்தளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரித்திகா சிங், துறுதுறு பெண்ணாக ரொம்பவும் ரசிக்க வைக்கிறார். இவர் பாக்சர் என்பதை மனதில்வைத்து பேயாக வரும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் இவரை அந்தரத்தில் தொங்கவிட்டு நடிக்க வைத்திருக்கிறார். ரித்திகா சிங் அதையெல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நேர்த்தியாகவே செய்திருக்கிறார். இந்த படத்தில் புதிய முயற்சியாக புடவையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதேபோல், நடனத்திலும் லாரன்ஸுக்கு இணையாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

சக்திவேல் வாசுவை மையப்படுத்திதான் கதையே நகர்கிறது. கிளைமாக்சில் தன்னுடைய வேதனையை சொல்லி இவர் அழும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. இப்படம் அவருக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என நம்பலாம்.

வடிவேலு எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக வந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர் காமெடியனாக மீண்டும் நடிக்கத்தொடங்கியதில் இந்த படம்தான் இவரது காமெடியை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி, ஊர்வசி, ராதாரவி, ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா, இன்னொரு நாயகியாக வரும் சாரா, பிரதீப் ராவத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ஷாகிர் ஹூசைனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தையே தமிழிலும் எடுத்திருக்கிறார் பி.வாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சற்று மாற்றங்கள் கொண்டுவந்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கொலைக்கான விசாரணையில் ஒவ்வொரு டுவிஸ்டுகளாக வைத்து அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை படம் முழுக்க கொடுத்திருக்கிறார். அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சிறப்பு.

தமன் இசையில் பாடல்கள் பிரமாதம். சில பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், மெலோடி பாடல்கள் தென்றலாகவும் வருடி சென்றிருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டல். சர்வேஸ் முராரேயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் திகில் ஊட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘சிவலிங்கா’ திரிலிங்கா இருக்கு.

Comments

தொடர்புடைய செய்திகள்