ஸ்டெபேன் டியோனின் இரட்டை நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராகவும் ஜேர்மனிக்கான உயர்ஸ்தானிகராகவும் ஸ்டெபேன் டியோன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது இரட்டை நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இந்த நியமனமானது வெளியுறவு விவகாரங்களில் மிக மோசமான விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பழமைவாதக் கட்சியின் வெளிவிவகார விமர்சகர் பீட்டர் கென்ட் விமர்சித்துள்ளார்.
அதேபோல், இரண்டு வாரங்களின் முன்னர் மேற்கொண்ட ஜேர்மனி பயணத்தின் போது, ஸ்டீஃபான் டியோனின் இந்த நியமனம் தொடர்பில் தாம் பல முறைப்பாடுகளை கேள்விப்பட்டதாக புதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவகார விமர்சகர் ஹெலேனா லவர்டியர் குறிப்பிட்டுள்ளார்.
ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் முதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக ஸ்டெபேன் டியோன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரின் அமைச்சுப் பதவி கிரிஸ்டியா ஃபிரிலாட்ரிற்கு மாற்றி வழங்கப்பட்டதுடன், ஜேர்மனிக்கான உயர்ஸ்தானிகராக ஸ்டெபேன் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களின் பின்னர், வழக்கத்துக்கு மாறான இரட்டை நியமனமாக அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதர் பொறுப்பினையும் பிரதமர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.