Home / உலகம் / சுவிஸ் /

சுவிஸ் குடியுரிமை பெற்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி பறிப்பு

Posted On : May 8, 2017

சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பதவியில் இருந்து நீக்க இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்த கீதா குமாரசிங்க என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

ஆனால், கீதாவிற்கு சுவிஸ் மற்றும் இலங்கை என இரு நாடுகளின் குடியுரிமை உள்ளதால் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவும், இதனை அரசாங்கத்திடம் இருந்து மறைத்த குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் இவ்வழக்கின் இறுதி வாதம் இலங்கை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, ‘சுவிஸ் குடியுரிமையை நிராகரித்து விட்டதாக எவ்வித ஆவணத்தையும் கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, கீதா இரட்டை குடியுரிமை பெற்றுள்ள குற்றத்திற்காக அவரது பதவியை பறிக்க உத்தரவிடுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியம், அரசாங்க கார் மற்றும் பிற அரசு சலுகைகளுக்காக ஆன அனைத்து செலவினங்களையும் அவர் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டில் மைத்திரியின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தமானது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ராஜபக்சேயின் இரண்டு சகோதர்களையும் வெகுவாக பாதித்தது. இவர்கள் இருவரும் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்