Home / உலகம் / ஐரோப்பா /

கலைமான்களைக் கொல்ல நார்வே அரசு முடிவு: காரணம் இது தான்!

Posted On : May 9, 2017

ஐரோப்பாவில் முதன்முறையாக நார்வேயில் மூளையை அழிக்கும் அபாயகரமான நோய் பரவி வருவதால், 2,200 கலைமான்களைக் கொல்ல அங்குள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

‘க்ரோனிக் வேஸ்டிங்’ என்னும் நோய் மான் இனத்தில் பரவி வரும் மூளையை அழிக்கும் தொற்று நோய் ஆகும். மான்களின் எச்சில் மூலம் பரவும் இந்த நோயால் மான்கள் எடை குறைந்து சில நாட்களில் இறந்துவிடுகிறது.

இந்நோய் வட அமெரிக்காவில் அதிகமாகப் பரவியுள்ளது. இந்நோய் மான்களிடம் இருந்து கலை மான்களுக்குப் பரவி வருகிறது. ஆனால், இந்நோய் மனிதர்களுக்கும் பரவுமா என்பது அறிவியல் ஆய்வாளர்களால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு முதல், நார்வேயில் உள்ள மான்களுக்கு குறித்த தொற்று நோய் பரவி வருகிறது. எனவே, அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டு மே ஒன்றாம் திகதிக்குள் நார்வே நாட்டின் நோர்ட்ஃப்ஜெல்லா மலைப்பகுதியில் உள்ள 2,200 கலைமான்களைக் கொல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.

கொல்லப்படும் மான்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மான்களின் எண்ணிக்கையில் 6% என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இது தொடர்பான அனுமதிக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு விவசாய அமைச்சக அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

யூன் 15ஆம் திகதி வரை உணவு பாதுகாப்பு ஆணையம் ஒரு செயல் திட்டத்தை முன்வைக்க உள்ளது. அதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எனினும், தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசிடம் வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி அவுஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்காவை தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழும் மான்கள் அழிவின் விளிம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்