Home / சினிமா / ஹாலிவுட் /

‘அவதார்’ அடுத்த பாகத்தின் கதைக் களம் எது தெரியுமா?

Posted On : May 11, 2017

உலக அளவில் சூப்பர் ஹிட்டான ‘அவதார்’ ஹாலிவுட் படத்தின் அடுத்தடுத்த பாக கதைக்களம் குறித்து புதிய தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரமாண்ட வசூலைக் குவித்த ஹாலிவுட் திரைப்படம் ‘அவதார்’.

‘டைட்டானிக்’ புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப் படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இவர் இயக்கிய ‘டைட்டானிக்’ பட வசூலையும் ‘அவதார்’ முறியடித்தது.

இந்த நிலையில், அவதார் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுந்தது. இதையடுத்து ‘அவதார்’ படத்துக்கு மேலும் 4 பாகங்கள் உருவாக்கப்படும் என்று ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ‘அவதார் 2’ 2014-ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்பட்டத. ஆனால் படத்தை பல்வேறு நவீன தொழிநுட்பத்தின் உதவியோடு தயாரிக்க உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து படத்தின் ரலீஸ் தேதி தெரிவிக்கப்படாமலேயே இருந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கேமரூன் ‘அவதார்’ இப்போதைக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் சில நாட்கள் கழித்து அடுத்த நான்கு பாகங்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

அதன் படி ‘அவதார் 2’ டிசம்பர் 2, 2020-ஆம் ஆண்டும், ‘அவதார் 3’ டிசம்பர் 17, 2021-ஆம் ஆண்டும் வெளியாக உள்ளது.

தொடர்ந்து ‘அவதார் 4’ டிசம்பர் 20, 2024-ஆம் ஆண்டும், ‘அவதார் 5’ டிசம்பர் 19 2025-ஆம் ஆண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

‘அவதார்’ முதல் பாகத்தின் கதைக்களம் காட்டில் வைத்து நடப்பது போன்று அமைந்துள்ளது. பண்டோரா என்ற வேற்றுலகத்தில் இருக்கும் வளங்களை கைபற்ற நினைக்கும் மனித இனத்துக்கு, அந்த உலகை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைந்திருந்தது.

ஆனால் அடுத்த வரும் பாகங்களில் கதைக்களம் நீருக்குள் அடியில் இருக்கும் உலகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே படம் முழுவதும் தண்ணீருக்குள் நடப்பது போன்றே எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்