Home / உலகம் / பிரான்ஸ் /

உந்துருளி சாரதியை மோதி கொன்றுவிட்டு தப்பியோடிய மகிழுந்து! – தம்பதியினர் கைது!!

Posted On : May 16, 2017
உந்துருளி சாரதி ஒருவரை மோதி கொன்றுவிட்டு, தப்பிச்சென்றுள்ள இளம் தம்பதியினர் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, Haute-Savoie இன் Allinges பகுதியில் ( Thonon-les-Bains இல் இருந்து 5 கி.மீ தொலைவில்) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இளைஞன் ஒருவரை மகிழுந்தால் இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்று சிலமணி நேரங்களுக்குள்ளாக, குறித்த இளம் தம்பதியினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். காவல்துறையினரின் தொடர்ச்சியான விசாரணைகளின் பின், இளம் தம்பதியினரில், பெண் மாத்திரம், உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், கடந்த வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும், இளம் தம்பதியினரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், தங்களது மகிழுந்தில் குறித்த இளைஞன் மோதவில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்