Home / உலகம் / அவுஸ்ரேலியா /

நல்லெண்ண பயணமாக ஆஸ்திரேலிய போர்க்கப்பல் நாளை சென்னை வருகை

Posted On : May 17, 2017

ஆஸ்திரேலிய நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அந்த நாட்டுக்கு சொந்தமான ‘ஏ.பி.சி.சி. ஓஷன் ஷீல்டு’ என்ற நவீன ரக போர்க்கப்பல் சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நாளை (வியாழக்கிழமை) காலை வருகிறது. கப்பலுடன் கேப்டன் ஆலன் சாம்ப்கின் தலைமையில் 16 கடற்படை அதிகாரிகள், 36 கடற்படை வீரர்களும் வருகை தருகின்றனர்.

இவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படை சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் ஆஸ்திரேலியா நாட்டு கடற்படை கமிஷனர் ரோமன் குவாட்வ்லிஜி, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரேலிய காவல்படையினர் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை சென்னையில் தங்கி, இந்திய கடலோர காவல்படையின் பரஸ்பர தொடர்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

மாயமான விமானம்

கடலோர பாதுகாப்புக்காக ருமேனியா நாட்டில் உள்ள துல்சியாவில் இந்த கப்பல் கட்டப்பட்டது. பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி முதல் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 8 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்த கப்பல், 110.9 மீட்டர் நீளமும், 22.05 மீட்டர் அகலமும் கொண்டது.

அதிகபட்சமாக மணிக்கு 16 கடல் மைல் தூரத்தை கடக்கும் திறன் கொண்டது. கப்பலின் மேல்தளத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது. மேலும் சரக்குகள் மற்றும் போர் தளவாடங்கள் கையாளும் வகையில் மேல் தளம் அமைந்துள்ளது. மலேசிய நாட்டுக்கு சொந்தமான ‘எம்.எச்.370’ விமானம் மாயமானபோது, அதனை தேடும் பணியில் இந்த கப்பலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் இந்திய பாதுகாப்பு துறை அனுப்பிய செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்