Home / உலகம் / ஜேர்மனி /

மின்ஸ்க் உடன்படிக்கையை செயலாக்க ஜேர்மனி மற்றும் உக்ரைன் இணக்கம்

Posted On : May 22, 2017

கிழக்கு உக்ரைனில் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் மின்ஸ்க் உடன்படிக்கையை செயற்படுத்துவது என்பவற்றிற்கு ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் (Angela Merkel) மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ (Petro Poroshenko) ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் மீஸபேக் (Meseberg) எனும் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) அங்கெலா மேர்க்கெல் மற்றும் பெட்ரோ பொரொஷென்கோவுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் உரையாற்றிய மேர்க்கெல், “அண்மையில் நான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாற்றினேன். சமாதான உடன்படிக்கைகள் மீறப்படுவதை நாம் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. அதை புடினும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு அதிகரிப்பது என்பதே எமது முக்கிய நோக்காக உள்ளது. அரசியல் ரீதியான முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பெட்ரோ பொரோஷென்கோ, “மின்ஸ்க் உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் அக்கறை செலுத்துகின்றோம். இதற்கு ஒப்பான வேறு எந்த நடவடிக்கையும் இருப்பதாக நான் கருதவில்லை. அதனால் குறித்த உடன்படிக்கை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கை, உக்ரைனிய அரச படைகள் மற்றும் சார்பு ரஷ்ய பிரிவினைவாதிகள் ஆகியோருக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலேயே உருவாக்கப்பட்டது.

எனினும், குறித்த உடன்படிக்கை தோல்வியில் முடியடைந்ததுடன் பீரங்கித் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்