Home / உலகம் / பிரித்தானியா /

லண்டன் தீவிரவாத தாக்குதல்.. மூன்று தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது எப்படி? பொலிசார் விளக்கம்

Posted On : June 5, 2017

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 48 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்களாக கருதப்படும் மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தொடர்புடையவர்களை பொலிசார் தீவிரமாக தேடிய நிலையில் தற்போது 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேரை சுட்டுக் கொன்றது எப்படி என்று பிரித்தானியா பொலிசார் Mark Rowley கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாலத்தில் வேனை வைத்து மக்கள் மீது மோதிய அவர்கள் உடனடியாக அங்கிருந்து Borough மார்க்கெட் பகுதியில் நுழைந்துள்ளனர்.

அங்கு நுழைந்த அவர்கள் உடனடியாக தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்று முடிவு செய்ததாகவும், இதற்கு 8 பொலிசார் 50 தோட்டக்களை பயன்படுத்தியதாகவும், அதன் பின் அந்த மூவரும் சம்பவ இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.

பொலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருந்த போதும் அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மூவரும் தங்கள் உடம்பில் மனித வெடிகுண்டு போன்று வைத்திருந்தனர். ஆனால் அருகில் சென்று சோதனை செய்து பார்த்த போது அது ஒரு போலி என்று தெரியவந்தது.

இவர்கள் மட்டும் தான் தாக்குதல் நடத்தினார்களா அல்லது வேறு யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகரில் நடந்த இத்தாக்குதலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இனி நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும், துப்பாக்கி ஏந்திய நிலையில் பொலிசார் எந்நேரமும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்