Home / உலகம் /

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் – போர்ச்சுக்கலில் 60 பேர் பலி!

Posted On : June 19, 2017

கடந்த வாரம் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலகையே ரணமாக்கிய இந்தத் தீ விபத்தின் சோகமே இன்னும் தீரவில்லை…. அதற்குள் போர்ச்சுக்கலின் வனப்பகுதி அதீத வெப்பம் காரணத்தால் தீப்பிடித்து எரிந்து வருகிறது என்ற செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த விபத்தில், இதுவரை 60 நபர்கள் தீயில் கருகி இறந்துவிட்டனர். கடந்த ஞாயிறன்று (18-06-2017) எரிய ஆரம்பித்த இந்த வனப்பகுதி இன்னும் கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தப் போர்ச்சுகலில், கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சுமார் 104 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் நிலவி வருவதால், இங்குள்ள காடுகளில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், பின்னர் அதைத் தீயணைப்பு படை வீரர்கள் அணைத்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் இருந்து வடக்கே 120 மைல் தொலைவில், பெட்ரோகா கிராண்டே பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில்தான் கடந்த ஞாயிறன்று பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், காடுகளில் உள்ள சாலைகளில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளில் பலர் தீக்கிரையாயினர். இதுவரை 62 நபர்கள் தீயில் கருகி இறந்துள்ளதாகப் போர்ச்சுகல் அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தீயினால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனை சிகிச்சையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை வீரர்களும் தீயினால், கடுமையானப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இறப்பு விகிதம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அருகில் உள்ள கிராம மக்களைப் பத்திரமாக வெளியேற்றி வருவதில், அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்திறங்கியுள்ள பலநூறு தீயணைப்புத்துறை வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகத்தால், வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், போர்ச்சுகல் அரசு தவித்து வருகிறது. போர்ச்சுகலில் இதுவரை ஏற்பட்டக் காட்டுத் தீ விபத்துகளிலேயே இதுதான் மிகப்பெரிய தீ விபத்தாகும்.

“தீயில் பல கார்கள் மாட்டிக்கொண்டன. அதிலிருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் உயிரோடு எரிந்து விட்டார்கள். பல பகுதிகளில், தீ வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீ வேகமாகப் பரவி வருவதால், எத்தனை நபர்கள் இறந்தார்கள் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. தற்போதைய கணக்கெடுப்பின்படி 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளது போர்ச்சுகல், அரசுத் தரப்பு.

இந்தத் தீ விபத்துப் பற்றி போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா கூறுகையில், “இப்படி ஒரு மிகப்பெரியக் காட்டுத் தீயை சமீபகாலமாக நாங்கள் கண்டது இல்லை. எதிர்பாராதவிதமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. தீயை அணைப்பதற்கும், மக்களைக் காப்பாற்றுவதற்கும் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.

லண்டன் தீ விபத்தின் கோரதாண்டவம் முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை; அந்த விபத்து ஏற்படுத்திய மரணங்களின் ரணங்கள்கூட நம் நெஞ்சை விட்டு அகலாத நிலையில், தற்போது போர்ச்சுகலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தானது மீண்டும் உலக மக்களின் மனங்களை ரணமாக்கியுள்ளது!

Comments

தொடர்புடைய செய்திகள்